சென்னை பொது அஞ்சலகத்தின் நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை வெளியீடு

By ம.மகாராஜன்

சென்னை: சென்னை பொது அஞ்சலகத்தில் நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை நேற்று வெளியிடப்பட்டது. சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்டார்.

சென்னை நகர மண்டல அஞ்சல் துறை சார்பில் சென்னை பொது அஞ்சலகத்தின் நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை வெளியிடும் நிகழ்வு சென்னை பாரிமுனையில் நேற்று நடைபெற்றது. தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜெ.ரோலாண்ட்ஸ் நெல்சன் முன்னிலையில் சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன், பொது அஞ்சலகத்தின் நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரையை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'தபால் பெட்டி எழுதிய கடிதம்' நூலை ஜி.நடராஜன் வெளியிட்டார். முதல் பிரதியை பொது அஞ்சலகத்தின் தபால்காரர்கள் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் ஜி.நடராஜன் பேசுகையில், "இந்த கட்டிடம் கட்டி முடித்து 140 ஆண்டுகள் ஆகின்றன. இந்த கட்டிடம் 2 முறை தீக்கிரையான கட்டிடம். இதை புதுப்பிக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொல்கத்தா, மும்பையை தொடர்ந்து சென்னை பொது அஞ்சலகம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சிறப்புமிக்க அஞ்சலகத்தில் ஓவிய அஞ்சல் முத்திரை இல்லாதது ஆச்சரியம் அளித்தது. இந்த முயற்சியை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி. தபால்காரர்களும், தபால் பெட்டியும் நம் அடையாளமாக இருந்து வருகின்றன. பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ரேசன் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு சேவைகள் தபால்கள் மூலமாகத் தான் நடைபெறுகின்றன.

சென்னை நகர மண்டலத்தில் டிஜிட்டல் லைப் சான்றிதழ், ஒரு லட்சம் பயனாளிகளுக்கான ஓய்வூதியம் தபால்காரர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வெளிக்கொணரும் வகையில் எழுதப்பட்டுள்ள 'தபால் பெட்டி எழுதிய கடிதம்' நூலை பள்ளிகளுக்கும் கொண்டு சேர்ப்போம்." என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சென்னை நகர மண்டல அஞ்சல்துறை இயக்குநர் மேஜர் எம்.மனோஜ், உதவி இயக்குநர் ஜி.பாபு, சென்னை பொது அஞ்சலகத்தின் முதன்மை அஞ்சல் அதிகாரி சுவாதி மதுரிமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE