ராமேசுவரம்: அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு ராமேசுவரத்திற்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் அதிகரித்துள்ளது. ராமநாத சுவாமி கோயிலில் காலை முதலே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.
வெளியூரில் இருந்து வந்த வாகனங்களால் ராமேசுவரம் திட்டக்குடி சந்திப்பு, சுங்கச்சாவடி, பேருந்து நிலையம், பேக்கரும்பு கலாம் நினைவிடம், தனுஷ்கோடி அரிச்சல் முனை, பாம்பன் சாலைப் பாலம் ஆகிய பகுதிகளில் வாகன நெரிசலால் ஸ்தம்பித்தன. பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. மேலும், ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.