சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் நிலையில் பன்னீர் கரும்பு காப்பீட்டுக்கு அரசு வழிவகை செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி, கடவாச்சேரி, வல்லம்படுகை, சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரைப் பகுதி கிராமங்களான பரிபூரண நத்தம், வெள்ளியக்குடி, ஓடாக்கநல்லூர், வெய்யலூர், வடபாக்கம், வாழக்கொல்லை, குறிஞ்சிப்பாடி வட்டம் வசனங்குப்பம், மதனகோபாலபுரம், அப்பியம்பேட்டை, காட்டுப்பாளையம், பிள்ளைபாளையம், அன்னதானம்பேட்டை, சிவனந்திபுரம், கோரணப்பட்டு பேய்க்கா நத்தம், கருப்பன்சாவடி, கட்டியங்குப்பம், சமட்டிக்குப்பம் மற்றும் பண்ருட்டி, கடலூர் வட்டப் பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் பன்னீர் கரும்பு பயிடப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் பன்னீர் கரும்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை அதிகாரிகளின் தொடர் வழிகாட்டல் இல்லாததாலும், புயல், மழை போன்ற இயற்கை இடர்பாடுகளாலும், காப்பீடு இல்லாததாலும், நிரந்தர விலை இல்லாததாலும் பன்னீர் கரும்பு சாகுபடி குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு அதிகளவு கரும்பு விளைவித்த விவசாயிகள் தற்போது மிக சொற்பமான அளவிலேயே விளைவித்துள்ளனர். அதனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு பன்னீர் கரும்பு அதிக விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி பொங்கல் பண்டிகைக்கு அரசு கரும்பு கொள்முதல் செய்யும்போது ஒரு கரும்புக்கு ரூ. 35 லிருந்து ரூ.40 வரை வழங்க வேண்டும். அதுவும் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வழங்க வேண்டும் என்றும், அரசு பன்னீர் கரும்புக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்பில் விவசாயிகள் உள்ளனர்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் குமரகுரு கூறுகையில், “பன்னீர் கரும்பு வேளாண் பட்டியலில் சேர்க்கப்படாத நிலை உள்ளது. உடனடியாக இதனை வேளாண் பட்டியலில் சேர்க்க வேண்டும். காப்பீடு கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்துறை அதிகாரிகள் தொடர் வழிகாட்டல் பன்னீர் கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
» பாஜக எம்பிக்களால் தாக்கப்பட்டேன்; முழங்கால்களில் காயம் ஏற்பட்டது - மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
இதேநிலை நீடித்தால் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பன்னீர் கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைந்துவிடும். அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும். அரசு அதிகாரிகள் பன்னீர் கரும்பை வேளாண் பட்டியலில் சேர்த்து காப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பன்னீர் கரும்பு பயிரிடும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.சேத்தியாத்தோப்பு அருகே வாழக்கொல்லை கிராமத்தில் பயிரிட்டுள்ள பன்னீர் கரும்பு.சேத்தியாத்தோப்பு அருகே வாழக்கொல்லை கிராமத்தில் பயிரிட்டுள்ள பன்னீர் கரும்பு.