திருப்பூர் அதிர்ச்சி: வாராந்திர மருத்துவ முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் அவமதிப்பு!

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வாராந்திர மருத்துவ முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, கடந்த 13-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், வாராந்திர குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் குடிப்பதற்காக குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த குடிநீர் வைக்கப்பட்டிருந்த இருக்கையானது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தப்படும் இருக்கையில் வைக்கப்பட்டிருந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமுக்கு வருபவர்களை பல்வேறு காரணங்கள் கூறி, அவர்களது கோரிக்கைகளை தள்ளி வைப்பதில் ஏற்கெனவே இழுத்தடிப்பு செய்கின்றனர். இந்நிலையில் இயற்கை உபாதையை கழிப்பதற்கு பயன்படுத்தப்படும் இருக்கையில் குடிநீர் வைத்திருப்பது மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் செயலாகும்.

ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகள் பலர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமுக்கு வருகிறார்கள். வருபவர்கள் தங்களின் தாகம் தணிக்க நினைத்தாலும், இதுபோன்ற இருக்கையில் வைத்து தண்ணீர் தருவது எந்த விதத்தில் நியாயம்? ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வழங்க ஒரு பிளாஸ்டிக் இருக்கை கூடவா இல்லாமல் போய்விட்டது.

அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் தரைதளத்தில் உள்ள கழிவறைகளுக்கு தாழ்ப்பாள் இல்லை. மாற்றுத்திறனாளிகள் கதவை தாழிட்டு செல்ல முடியாததால், அதனை பலரும் பயன்படுத்துவதில்லை. பல மணி நேரம் பயணம் செய்து, இந்த முகாமுக்கு வந்து காத்திருக்கும் நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க முடியாத நெருக்கடி ஏற்படுகிறது.

சராசரியாக பயன்படுத்தும் கழிவறைகளை மாற்றுத்திறனாளிகளும் பெரும் சிரமத்துக்கு இடையே பயன்படுத்துகிறார்கள். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இவற்றையெல்லாம் களைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் வேறொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதால், மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். கோரிக்கைகளை புறந்தள்ளாமல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து உடனடியாக பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE