டிச.14, 15-ல் சிவகாசியில் 2வது கரிசல் இலக்கியத் திருவிழா - கனிமொழி தொடங்கி வைக்கிறார்!

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2வது கரிசல் இலக்கியத் திருவிழா இம்மாதம் 14, 15ம் தேதிகளில் சிவகாசியில் நடைபெறுகிறது. கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பங்கேற்று விழாவை தொடங்கிவைக்க உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தெற்கத்திச்சீமை என அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தாறு, கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக கிடக்கும் கரிசல் நிலத்தைக் கதைக் களனாகவும் அங்கு வாழும் மனிதர்களைக் கதை மாந்தர்களாகவும் கொண்டு, வெந்து தணியும் அந்தக் கந்தக பூமியில் அவர்களின் பாடுகளை, வாழ்வியலை, வலிகளை, சந்தோஷத்தை அந்த மண்ணிற்கே உரிய வட்டார மொழிநடையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாகச் சொல்லி வரும் இலக்கியமே கரிசல் இலக்கியம்.

கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும் நாமும் நமது வருங்காலச் சந்ததிகளும் அறிந்துகொள்ளவும், கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும், கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்குவதும் நோக்கமாகக் கொண்டு, இந்த கரிசல் இலக்கியத் திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2வது முறையாக மாவட்ட நிர்வாகமும் கரிசல் இலக்கிய கழகமும் இணைந்து, சிவகாசியில் உள்ள மாஸ்டர் பிரிண்டர்ஸ் அரங்கத்தில் இம்மாதம் 14, 15ம் தேதிகளில் இவ்விழாவை நடத்துகின்றன. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை விழா நடைபெறும். 14ம் தேதி காலை நடைபெறும் தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில், கனிமொழி எம்.பி., வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் பங்கேற்று தொடங்கிவைக்க உள்ளனர்.

இந்த கரிசல் இலக்கியத் திருவிழாவில் 14ம் தேதி இரு அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் அரங்கு -1ல் கரிசல் சிறுகதை என்ற தலைப்பில் எழுத்தாளர் மதிகண்ணன் தலைமையில், எழுத்தாளர் தமிழ்செல்வன் கரிசல் சிறுகதை தொடக்கமும், தொடர்ச்சியும் என்ற தலைப்பிலும், கவிஞர் மதுமிதா கு.அழகிரிசாமி கதைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.

அதனைத்தொடர்ந்து, கரிசல் இலக்கிய நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் சாகித்ய அகாதமி விருதாளர் சோ.தர்மன் தலைமையில், எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், ரவீந்திரன், விஜிலா தேரிராஜன், தமிழ்க்குமரன், அன்னக்கொடி ஆகியோர்கள் கருத்துரையாற்றுகின்றனர். தொடர்ந்து 2 நாள் நடைபெறும் நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புகளில் பல்வேறு எழுத்தாளர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

மேலும், இலக்கிய உரைகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும், நாமும் நமது வருங்காலச் சந்ததிகளும் அறிந்து கொள்ள கரிசல் இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும், இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், படைப்பாளிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுலாம்.' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE