‘கனமழையால் அறுவடை கூலிக்கு கூட மகசூல் இல்ல...’ - நாகை விவசாயிகள் வேதனை

By KU BUREAU

நாகப்பட்டினம்: கனமழையின் காரணமாக நீரில் மூழ்கி சேதமடைந்த குறுவை நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் நாகை விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அறுவடை கூலிக்கு கூட மகசூல் கிடைக்கவில்லை என்பதால் வேதனையடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மேலாக விட்டு விட்டு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாரான பின்பட்ட குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மழைநீரில் மூழ்கின.

குறிப்பாக, நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த வடக்கு பனையூர், தெற்கு பனையூர், சாட்டியக்குடி, கொத்தங்குடி, மோகனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், நெல் மணிகள் அழுகியும், ஒரு சில இடங்களில் நெல்மணிகள் முளைத்தும் சேதமடைந்தன.

இந்நிலையில், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைத்து அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஒரு வாரத்துக்கு மேலாக மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது.

விவசாயிகள் வேறு வழியின்றி கதிர் அரிவாள் கொண்டு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மழையால் பாதித்ததால் அறுவடை கூலிக்கு கூட போதிய மகசூல் இல்லை என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், அரசு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மறு சாகுபடி செய்ய ஏதுவாக விதை நெல், உரம் ஆகியவற்றை மானியவிலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE