ராமேசுவரம்: மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கிளாத்தி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் மற்றும் நாட்டுப் படகுகளும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கனமழை, கடல் சீற்றம் அதனை தொடர்ந்து ஃபெஞ்சல் புயல் இதனால் மீனவா்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத சூழலில் இருந்தனர்.
தொடர்ந்து கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு மீன் வரத்து குறைந்தே காணப்பட்டதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று கரை திரும்பிய பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கிளாத்தி மீன்களின் வரத்து திடிரென அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது, ”பாம்பன் கடற்பகுதியில் நெய் மீன், வஞ்சிரம், விலை மீன், பாறை, திருக்கை, ஊளி, சூடை, சூவாறை உள்ளிட்ட மீன்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. மேலும் நண்டு, கணவாய், இறால் உள்ளிட்ட உயர் ரக மீன்களும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ”ராமேசுவரம் மீன்” என்றப் பெயரில் விற்பனைச் செய்யப்படுகிறது. தற்போது மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கிளாத்தி மீன் சீசன் துவங்கியுள்ளது. படகு ஒன்றில் சராசரியாக 5 முதல் 10 கூடைகள் வரையிலும் மீன்கள் கிடைக்கின்றன.
» தமிழகத்தில் 11.48 லட்சம் பெண்களுக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க ஏற்பாடு
» 139-வது ஆண்டில் மதுரை 'ஏவி' மேம்பாலம்: தொல்லியல் பாரம்பரிய முறைப்படி சீரமைக்கப்படுமா?
ஒரு கூடையில் அதிகப்பட்சம் 60 கிலோ மீன்கள் வரை வைக்கலாம். இந்த கிளாத்தி மீன்கள் தமிழகத்தின் பிரதான மீன் சந்தைகள் மட்டுமின்றி கேரளாவிற்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. கிளாத்தி மீன்கள் கோழித்தீவனம் தயாரிக்க பயன்படும் என்பதால், தரிசு நிலங்களில் உலர வைத்தும் விற்பனை செய்யப்படுகின்றது. உலர வைக்கப்பட்ட மீன்கள் அங்கிருந்து நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கோழித் தீவனம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன” என்றனர்.