139-வது ஆண்டில் மதுரை 'ஏவி' மேம்பாலம்: தொல்லியல் பாரம்பரிய முறைப்படி சீரமைக்கப்படுமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: நாளை டிசம்பர் 8ம் தேதியுடன் 139வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மதுரை ஏவி மேம்பாலத்தை, பழைய தொல்லியல் பாரம்பரிய முறையில் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரையில் 139வது அடியெடுத்து வைக்கும் ஆல்பர்ட் விக்டர்(ஏவி மேம்பாலம்) மேம்பாலத்தை பழைய தொல்லியல் பாரம்பரிய முறைப்படி சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆல்பர்ட் விக்டர் (ஏவி மேம்பாலம்) மேம்பாலம், கடந்த 1886ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி கட்டி திறக்கப்பட்டது. நாளையுடன் இந்த பாலம், 138ம் ஆண்டுகளை நிறைவு செய்கிறது. வைகை ஆறு, மதுரையை வடக்கு மற்றும் தெற்கு பகுதியாக நகரப்பகுதிகளை பிரிக்கிறது. கடந்த காலத்தில் வைகை ஆற்றை கடப்பதற்கு மேம்பாலம், தரைப்பாலம் எதுவும் இல்லை. மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்படும்போது, வைகை ஆற்றை கடந்து இரு நகர்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்களும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து, 1886ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியில் வைஸ்ராயாக இருந்த எர்ல் ஆஃப் டஃப்ரைன் என்ற அதிகாரியால் இந்த ஏவி மேம்பாலம் கட்டுவதற்கு முயற்சி செய்து கட்டி முடித்துள்ளார். இந்த பாலம் 250 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த மேம்பாலம் வந்தபிறகு, மதுரை மாநகரின் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், ஆன்மீக சுற்றுலா, வியாபாரம் பெரியளவில் உயர்ந்தது. இப்படி மதுரையின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக திகழும், ஏவி மேம்பாலம், இன்று டிசம்பர் 8ம் தேதியுடன் 138ம் ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்த மேம்பாலம் கட்டியப்பிறகு, வைகை ஆற்றின் குறுக்கே ஏராளமான தரைப்பாலங்கள் கட்டப்பட்டன. அந்த பாலங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனநிலையில் பிரிட்டிஷார் கட்டிய இந்த பாலம், மட்டும் தற்போது வரை மதுரை மாநகரின் போக்குவரத்திற்கு உயிர் நாடியாக இருந்து வருகிறது. தினமும் பல லட்சம் வாகனங்கள் இந்த மேம்பாலத்தை கடந்து சென்றும், இன்னும் சிதிலமடையாமல் கம்பீராக நிற்கிறது. இந்த ஏவி மேம்பாலம் கட்டுவதற்கு பிரிட்டிஷ் அரசு, அந்த காலக்கட்டத்தில் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றில் ரூ.2, 85,697 மட்டும் செலவானநிலையில் மீதமுள்ள பணம் ரூ.14,303 அரசு கருவூலத்தில் திருப்பி செலுத்தப்பட்டதாகவும் பிரிட்டிஷ் ஆவணங்கள் கூறுகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய கட்டுமானமுறையில் இந்த பாலம், சுர்க்கி, சுண்ணாம்பு, சுடுக்காய், வெல்லம், முட்டை வெள்ளைக்கரு ஆகியவற்றையும், கருங்கற்களையும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த பாலத்திற்கு ஆண்டுதோறும் வெள்ளையடிப்பதை தவிர வேறு எந்த பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. பழைய தொல்லியல் பாரம்பரிய முறைப்படி சீரமைக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பாலத்தை சீரமைக்க ஆட்சியருக்கு கடிதம்: வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் கூறுகையில், ''பாலத்தின் மேல் தளத்தில் உள்ள தார் சாலையை பராமரிக்க, பழைய தாரையை எடுத்து, புதிய தார் போட்டு பராமரிக்க வேண்டும். ஆனால், பழைய தாரை எடுக்காமலே அதன்மேலே புது தாரைப்போட்டதால் தற்போது பாலத்தின் கரையோரம் இருந்த நடைமேடையும், சாலையும் சமதளமாக மாறிவிட்டது. அதனால், பாலத்தின் எடை அதிகரித்து அதன் உறுதிதன்மைக்கு கேடு விளைவிக்கிறது.

பாலத்தின் 2, 7, 8வது வளைவு தூண்களின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுவதால் நெடுஞ்சாலைத்துறை பழைய தொல்லியல் பாரம்பரிய முறைப்படி பூச்சி பூசி பாதுகாக்க வேண்டும். பாலத்தின் தூண்களுக்கு இடையே மரக்கிளைகள் அதிகளவு உள்ளன, அவற்றை அகற்றாமல் உள்ளனர். பாலத்தின் கைப்பிடி சுவர்கள் இடிந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுதொடர்பாக ஆட்சியர் சங்கீதாவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE