300 ஆண்டுக்கான தேதியை சொன்னால் கிழமையை சரியாக சொல்லும் குமரியை சேர்ந்த 12 வயது சிறுமி!

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் காப்பிகாட்டுவிளை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஸ்ரீகுமார், ராஜேஸ்வரி தம்பதிகளின் மகள் ஸ்ரீகா (12). இவர் கூட்டாலுமூட்டில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீகா குழந்தையாக இருக்கும்போது நாட்காட்டியை (காலண்டர்) அதிகம் நேசிக்கும் குணம் கொண்டவராக இருந்துள்ளார்.

யாராவது தனது பிறந்த நாளை கூறினால் காலண்டரை பார்க்காமலேயே உடனே அந்த நாள், கிழமையை தெரிவித்து வந்துள்ளார். அது போல பண்டிகை தேதியை கூறினால் அடுத்த விநாடியே கிழமையை கூறுகிறார்.

கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் பயன்படுத்திய மாணவி படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களை காலண்டரை பார்ப்பதில் செலவிட்டுள்ளார்.

நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகும் இந்த பழக்கத்தை அவர் தொடர்ந்துள்ளார். இதை கவனித்த பெற்றோர் ஆன் லைனில் இருந்து பழைய காலண்டர்களை பதிவிறக்கம் செய்து கொடுத்து உள்ளனர். இது மாணவியை மேலும் ஊக்கப்படுத்தியது.

இதன் பயனாக தற்போது மாணவி ஸ்ரீகா எந்த சிறப்பு பயிற்சியும் இன்றி கடந்த காலம், நிகழ்காலம் , வருங்காலம் என 1900 முதல் 2,200-ம் ஆண்டு வரை எந்த தேதியை தெரிவித்தாலும், அதற்கான கிழமையை சரியாக கூறி வருகிறார். அவரிடம் அடுக்கடுக்காக இடை விடாமல் தேதி, ஆண்டை கூறினாலும் சளைக்காமல் நொடிப்பொழுதில் கிழமையை தெரிவிக்கிறார்.

அத்துடன் 10 ஆண்டுகளுக்கான பண்டிகை நாட்களை கூறினாலும் அதற்கான கிழமையை உடனே தெரிவிக்கிறார். கிழமைகளை கூறுவதில் மேலும் புதுவிதத்தில் திறமையை வளர்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே தனது லட்சியமாக இருப்பதாக ஸ்ரீகா தெரிவிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE