ஒரு ஏக்கரில் 64 வகை பாரம்பரிய நெல் சாகுபடி - தஞ்சை இளைஞர் புதிய முயற்சி

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூா்: ஒரு ஏக்கர் நிலத்தில் 64 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு, பாரம்பரிய விதை பாதுகாப்பு மையத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த எம்சிஏ பட்டதாரி இளைஞர் உருவாக்கியுள்ளார். தஞ்சாவூர் மானம்புச்சாவடியைச் சேர்ந்தவர் சி.ராஜராஜன்(38). எம்சிஏ பட்டதாரியான இவர், தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில் கிராமத்தில் இயற்கை முறையில், பாரம்பரிய நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்.

கடந்தாண்டு தமிழக அரசின் சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது பெற்ற இவரது தந்தை கோ.சித்தர், இயற்கை வழியில் பாரம்பரிய நெல் சாகுபடியை மேற்கொண்டு, இதன் மகத்துவத்தை பலருக்கும் எடுத்துக் கூறி நாடு முழுவதும் தொடர் பயணத்தை மேற்கொள்வதால், தந்தை வழியில் மகன் ராஜராஜன் தற்போது பாரம்பரிய நெல் சாகுபடியில் களம் இறங்கியுள்ளார்.

தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய விதை பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்தி, அதில் மைசூர் மல்லிகை, நவரா, பூங்கார், மஞ்சள் பொன்னி, தூயமல்லி, பெருங்கார், ஆற்காடு கிச்சிலி, கிச்சிலி சம்பா, கருடன் சம்பா, சண்டிக்கார், காட்டுயானம், மாப்பிள்ளைச் சம்பா, தஞ்சாவூர் கருப்பு அரிசி, வனரகம், மிளகு சம்பா, குத்தலி, குடைவாழை உள்ளிட்ட 64 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்துள்ளார். தற்போது இந்த நெற்பயிர்கள் அனைத்தும் 3 அடி முதல் 5 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.

இதிலிருந்து விளையும் நெல் முழுவதையும், தேவைப்படும் விவசாயிகளுக்கு விதையாக வழங்க முடிவு செய்துள்ளார். பாரம்பரிய நெல்களை பாதுகாக்க வேண்டும், ஆரோக்கியமான உணவு முறையை பொதுமக்கள் மத்தியில் கொண்டுவர விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த விதை பாதுகாப்பு மையத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜராஜன் கூறியது: விவசாயிகள் மத்தியில் பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்ய வேண்டும் என்பதற்காக தமிழக அரசே மானிய விலையில் விதைநெல் வழங்கி வருகிறது. ஆனால், பாரம்பரிய விதை நெல் தேவை அதிகமாக இருப்பதால், அதற்காக இந்த விதை பாதுகாப்பு மையத்தை உருவாக்கியுள்ளேன்.

குறிப்பாக பாரம்பரிய விதைகள் முதல் இரண்டு ஆண்டுகள் மட்டுமே முழுமையாக முளைக்கும் தன்மை உடையவை. அதன்பிறகு அதன் முளைப்பு தன்மை குறைந்து கொண்டே செல்லும். விவசாயிகள் பலரும் நாள்பட்ட விதைகளை வைத்திருந்தால், அதை சாகுபடி செய்யலாம் என்ற தவறான எண்ணம் உள்ளது. இதை போக்க வேண்டும்.

பாரம்பரிய நெல்லிருந்து கிடைக்கும் அரிசிகள் பெரும்பாலும் மருத்துவ குணமுடையவை. தற்போது பொதுமக்கள் மத்தியில் இந்த அரிசியை பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், இதன் தேவையும் அதிகரித்துள்ளது. நான் உருவாக்கியுள்ள இந்த பாரம்பரிய விதை நெல் பாதுகாப்பு மையத்தில் 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை வளர்ந்து மகசூல் தரக்கூடிய 64 வகையான நெல் ரகங்களை விதைத்து நடவு செய்துள்ளேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE