கல்வராயன் மலைவாழ் மக்கள் ஏற்றம் பெறுவார்களா?

By ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது கல்வராயன்மலை. இந்த மலைவாழ் மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளால் இம்மாவட்ட அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இப்பகுதி மக்களுக்காக செய்யப்படும் சாலை வசதி, குடிநீர் வசதி, ஆதார் அட்டை, குடும்ப அட்டை வழங்கல் உள்ளிட்டவை குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அதற்கேற்றவாறு செயல்படவேண்டிய கட்டாயம் அரசு நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கல்வராயன்மலை மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டம் தேர்வு செய்யப்பட்டு, அந்த வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கே நேரடியாக சென்று, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கல்வராயன்மலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியர், “இத்திட்டத்தின் கீழ் வெள்ளிமலை மலை வாழ் மக்களுக்கு பல்நோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்குதல் குறித்து கேட்டறிந்தார்.

வெள்ளிமலை பழங்குடியினருக்காக கரியாலூர் கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மகளிருக்கான மரம் இல்லா வனப் பொருட்கள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்தி நிறுவனத்தின் கட்டிடத்தை பார்வையிட்டு, அக்கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

கல்வராயன்மலைப் பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுபற்றி கரியாலூர் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் கூறுகையில், “கள்ளச்சாராய சம்பவ உயிரிழப்பைத் தொடர்ந்து, கல்வராயன்மலை வாழ் மக்கள் பற்றி சமூக ஊடகங்களில் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வந்தபோது மன உளைச்சலுக்கு ஆளானோம்.

இந்த துயரச் சம்பவத்துக்குப் பின் கல்வராயன்மலையில் செயல்படுத்தும் அரசுத் திட்டங்களும், அதிகாரிகளின் அடிக்கடி வந்து ஆய்வு நடத்துவதும் எங்களுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று தெரிவிக்கிறார். ஆனாலும், நிரந்தர வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். மலைசார் மக்களுக்கான பல்வேறு தொழில்கள் உள்ளன. அதனை ஊக்குவிக்க தனித்திறனுடன் கூடிய பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்பட வேண்டும்.

இவர்களுக்கான நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை அறிய தனி சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று இப்பகுதியின் மீத அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதைவிட்டு வெறும் நலத்திட்ட உதவிகளை அவ்வபோது வழங்குவது மட்டுமே, இவர்களின் பிரச்சினைக்கு தீர்வாகி விடாது என்றும் இப்பகுதியின் மீது அக்கறை கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலைச் சாலை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE