மதுரை: உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோயிலை சுத்தம் செய்தபோது, 100 ஆண்டு பழமையான குளம் கண்டுபிடிக்கப்பட்டது. அக்குளத்தை இளைஞர் ஒருவர், தனது சொந்த செலவில் சீரமைத்து ஆழப்படுத்திய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் பிரசித்திப் பெற்ற ஒச்சாண்டம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுற்றுவட்டார 10 கிராம மக்கள் வழிப்பட்டு வருகிறார்கள். இக்கோயிலில் பல்வேறு நேர்த்திக் கடன், கிடா வெட்டு போன்ற விழாக்கள் சிறப்பாக ஆண்டு முழுவதும் நடக்கிறது. ஆனால், கோயிலை சுற்றி புதர்மண்டி, மரங்கள் நிறைந்து பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது.
அப்பகுதி மக்கள், இக்கோயிலை சுத்தப்படுத்த, அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் இளமகிழனிடம் கூறியுள்ளனர். இளமகிழன் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கரோனா காலத்தில் வீடுகளில் முடங்கிய அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு நிதியுதவி வழங்கினார்.
அதன் அடிப்படையில் இளமகிழன், நண்பர்களுடன் சேர்ந்து தனது சொந்த செலவில், தொழிலாளர்களை விட்டு கோயிலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது புதர், முட்செடிகளையும், மரங்களையும் வெட்டி சுற்றுப்புறப் பகுதிகளை சுத்தப்படுத்தம்போது, கோயில் அருகே பழமையான குளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயிலில் வழிபடும் அப்பகுதி மக்களுக்கே, இங்கே இப்படியொரு குளம் இருப்பது தெரியவில்லை.
» மழைக் காலத்தில் சேற்றுப் புண் பாதிப்பு - தடுப்பு வழிகள் என்னென்ன?
» சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக குமுளியில் நேந்திரம் சிப்ஸ் தயாரிப்பு பணி தீவிரம்
ஆர்வமடைந்த இளமகிழன், ஜேசிவி வரவழைத்து தொழிலாளர்களை விட்டு, குளத்தை ஆழமாக தோண்ட ஆரம்பித்துள்ளார். தற்போது குளத்தை தூர்வாரி, ஆழப்படுத்தி, மழை பெய்தால் இக்குளத்தில் தண்ணீர் தேங்கும்படி அழகுப் படுத்திக் கொடுத்துள்ளார். கோயில் அருகே இப்படியொரு குளம் இருப்பது கண்டு அப்பகுதி மக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து இளமகிழன் கூறுகையில், "பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில், 10 கிராமங்களுக்கு கட்டுப்பட்டது. இக்கோயிலுக்கு வருகிறவர்களுடைய குலசாமி, ஆச்சி கிழவி என்று சொல்வார்கள். ஆச்சி கிழவியைதான், அப்பகுதி மக்கள் ஒச்சாண்டம்மனாக வழிபடுகிறார்கள். ஆரம்பத்தில் கோயிலை சுத்தம் செய்யும் திட்டத்துடன்தான், இந்த பணியில் இறங்கினோம். சுத்தம் செய்யும்போது, இப்படி ஒரு குளத்தை பார்த்துவிட்டு மனதார விட்டு செல்ல முடியுமா? அதனால், ஆழப்படுத்தி இயல்பான குளத்தை மீட்டெடுத்துள்ளோம்.
முன்னோர்கள் போல், நம்மால் இதுபோன்ற நீர்நிலைகளை உருவாக்க முடியாது. ஆனால், அவர்கள் உருவாக்கிய இந்த அமைப்புகளை பாதுகாக்க வேண்டும். கோயில் அருகே உள்ள பகுதிகளை சுத்தப்படுத்தும்போது, திடீரென்று ஒரு சிறிய குளம், அதனை சுற்றி பெரியகுளம் போன்ற அமைப்பு இருந்தது. தண்ணீர் அதிகம் இல்லாதபோது, சிறிய குளத்தில் இறங்கி குளிக்கிற மாதிரி அமைப்பும், தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் போது பெரிய குளத்தின் ஓரமாக நின்று குளிக்கிற மாதிரி அமைப்பும் உள்ளது. இக்குளம் 100 ஆண்டிற்கு மேலான பழமையானது. எனக்கு 46 வயதாகிறது.
எனக்கு, எங்கப்பா, ஊர் பெரியவர்களுக்கு கூட இதுபோன்ற குளம் இங்கே இருந்தது தெரியவில்லை. முன்னோர்கள், இக்குளத்தை வெட்டி அமைத்துக் கொடுத்துள்னர். மழை தண்ணீர் நிரம்பி நின்றால் இக்கோயிலுக்கு இக்குளம் கூடுதல் அழகை கொடுக்கும். பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக இருக்கும். இக்குளத்திற்கு வரக்கூடிய மழைநீர் கால்வாய்கள் ஆங்காங்கே ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதையும், சட்டப்படி அகற்றி, கண்மாய்க்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்ய உள்ளோம்" என்று இளமகிழன் கூறினார்.