புதுக்கோட்டை: மழைக் காலத்தில் சேற்றுப்புண்ணால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரும் நிலையில், இதைத் தடுக்க அரசு மருத்துவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.
இதனால்,ஈரமான பகுதியில் கால்நடைகள் பராமரிப்பு, வயல் வேலை ஆகியவற்றால் காலில் சேற்றுப்புண் ஏற்படுகிறது. பெரியவர்கள் மட்டுமின்றி, சிறுவர்களும் சேற்றுப்புண்ணால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சேற்றுப்புண் வராமல் தடுப்பதும், வந்த பிறகு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதும் அவசியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஆலங்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் எம்.பெரியசாமி, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:சேறு, நீண்ட நாள் தேங்கிய தண்ணீர், கழிவுநீர் ஆகியவற்றில் இருந்து உருவாகும் நுண் கிருமிகளின் தொற்றால், கால்களில் புண் உண்டாகிறது.
» தெலங்கானாவில் 92% சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்துவிட்டது: முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!
» சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக குமுளியில் நேந்திரம் சிப்ஸ் தயாரிப்பு பணி தீவிரம்
சிவப்பு நிறத்தில், செதில், அரிப்பு போன்ற வெடிப்புகள் தோன்றும். அடுத்ததாக கால் விரல்களுக்கு இடையில் அல்லது உள்ளங்கால்களில் கொப்புளங்கள், வீக்கம் ஏற்படும். அதிக அரிப்பும்ஏற்படும்.
சேற்றுப்புண்ணின் பாதங்களில் வலி ஏற்பட்டு புண்களில் சீல்பிடிக்கும் நிலை ஏற்படும். இது, ஒரு வகையான பூஞ்சை தொற்று. கால் விரல்களுக்கு இடையே தொடங்கி மற்ற இடங்களுக்குப் பரவும். காலணிகள் இல்லாமல் ஈரமான தரையில் நடப்பதாலும், கால்களை சரியாக கழுவி சுத்தம் செய்யாததாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
சர்க்கரை நோய், கால் வீக்கம் உள்ளவர்கள், நீண்ட நேரம் ஷூ அணிந்து வேலை செய்பவர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். மிகவும் இறுக்கமான காலணிகளை அணிந்தால், பூஞ்சை தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது.
சேற்றுப்புண் மற்ற பூஞ்சை தோல் நோய்த் தொற்றுகளைப் போன்றது. ஆனால், உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் மீண்டும் மீண்டும் உருவாகும். தினமும் கால்களை, குறிப்பாக கால்விரல்களுக்கு இடையே உள்ள பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
பாதத்தை ஈரம் இல்லாமல் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ரப்பர் மற்றும் வினைல் போன்ற செயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட காலணிகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களிலும், கால்நடைகளைப் பராமரிக்கும்போதும் வெறுங்காலுடன் செல்லக்கூடாது.
கால் உறைகளை அடிக்கடி துவைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சேற்றுப்புண் வருவதை தடுக்கலாம். சேற்றுப்புண்ணுக்கு மருந்து, மாத்திரைகள், களிம்புகள் உள்ளன. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை பயன்படுத்தினால் எளிதில் குணமடையலாம் என்றார்.