ரூ.2.84 கோடியில் அமைக்கப்பட்ட முட்டம் சுற்றுலாத் தளம் திறப்பு!

By எல்.மோகன்

நாகர்கோவில்: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் சுற்றுலாத் தளத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இதை குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முதல் 5 சுற்றுலாத் தளங்களில் முட்டம் கடற்கரை ஐந்தாவது இடம் பெற்றுள்ளது. முட்டம் கடற்கரை கன்னியாகுமரியில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு கம்பீரமான பாறைகள் நிறைந்த கடற்கரையாகும். இங்குள்ள பாறைகள் மேல் அலைகள் மோதி பனி போல் சிதறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் உள்நாடு மற்றும் அயல்நாடு சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர்.

2022-2023ம் ஆண்டு சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி முட்டம் கடற்கரை பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ரூ.2.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் பணிகள் மேற்கொள்வதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. முட்டம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கழிவறைகள், சிறுவர் பூங்கா, சூரிய கடிகாரம், வாகன நிறுத்துமிடம், சாவினர் சாப், நுழைவுச் சீட்டு வழங்கும் கட்டிடம், நடைப்பாதை, மின்விளக்கு உட்பட பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் சுற்றுலாத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா தளத்தில் தினமும் குப்பைகள் அகற்றியும், கழிப்பறைகளை சுத்தப்படுத்தி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தெரு விளக்குகள், உணவகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு உற்ற நண்பர்களாக இருந்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பினையும், சுற்றுலா தளம் குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். முட்டம் சுற்றுலாத் தளத்தினை பராமரிக்கும் பொறுப்பு முட்டம் ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

முட்டம் கடற்கரையின் சுற்றுலாப் பயணிகள் வாயிலாக கிடைக்கப்பெறும் வருமானத்தினை முட்டம் ஊராட்சி நிர்வாகமே பயன்படுத்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை சுற்றுலாத் தளத்தினை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த முதலமைச்சருக்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், முட்டம் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அனுசியா தேவி, முட்டம் ஊராட்சிமன்ற தலைவர் நிர்மலா, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் எனல்ராஜ், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE