கார் பார்க்கிங் வசதியின்றி ‘திணறும்’ திருவண்ணாமலை மாநகரம்!

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கார் பார்க்கிங் வசதி இல்லாமல் திருவண்ணாமலை மாநகரம் திணறுகிறது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திகழ்கிறது. இத்திருத்தலத்துக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தருகின்றனர்.

மேலும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களின் வருகை உள்ளது. நினைக்க முக்தி தரும் திருத்தலம் என அழைக்கப்படும் திருவண்ணாமலை அணணாமலையார் கோயிலுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பவுர்ணமி நாளில் சுமார் 5 லட்சம் பக்தர்களும், சித்ரா பவுர்ணமி நாளில் 10 லட்சம் பக்தர்களும் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் 20 முதல் 25 லட்சம் பக்தர்களும் வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்தனர். அதன்பிறகு, பக்தர்களின் வருகையானது கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

இதில், தமிழக பக்தர்களுக்கு இணையாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அண்ணாமலையாரை குல தெய்வம் என்றும், அண்ணாமலையாரை வணங்கி வழிபட்டால் பாவ விமோசனம் கிடைக்கும் என தெலங்கு ஆன்மிகவாதிகள் கூறியதாக தகவல் வெளியானதால், அம்மாநிலங்களின் பக்தர்களின் வருகை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன. இதனால், ஒவ்வொரு பவுர்ணமிக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துவிடுகிறது. மேலும், அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இதிலும் ஆந்திரா, தெலங்கானா பக்தர்களின் எண்ணிக்கை சரிபாதியாக இருக்கும். மேலும், சபரிமலை ஐயப்பன் வழிபாடு தொடங்கி விட்டதால், பக்தர்களின் வருகை உயர்ந்துவிட்டது. இவர்களில் 75 சதவீதம் பேர் கார், வேன் மற்றும் வாடகை பேருந்துகளில் திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.

இவ்வாறு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லை. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும், நிரந்தர பார்க்கிங் அமைப்பது குறித்த செயல்திட்டம் ஏதுவுமில்லை. இதனால், சாலையில் வாகனங்களை நிறுத்துவது வாடிக்கையாகிவிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், கடைகள், வீடுகள் முன்பும் வாகனங்களை நிறுத்திவிடுதால், உள்ளூர் மக்கள் தவிக்கின்றனர். கார் பார்க்கிங் வசதி இல்லாததால் திருவண்ணாமலை மாநகரம் திணறுகிறது. இப்போதே இந்நிலை என்றால், வரக் கூடிய கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் 17 நாட்களில், நிலைமை சிக்கலாக இருக்கக்கூடும்.

கார்த்திகை தீபத் திருவிழாவில் பார்க்கிங் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி ஆஸ்ரா கர்க் எச்சரிக்கை, அனைத்து நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, “உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ள பூமியில் வசிப்பதை பாக்கியமாக கருதுகிறோம். அதேவேளையில், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தமிழக பக்தர்களுக்கு இணையாக மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு, திருவண்ணாமலை மாநகரில் பார்க்கிங் வசதி இல்லை. இதனால், பிரதான சாலைகள் மற்றும் வீதிகளில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர்.

போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. மேலும், வீடுகள் முன்பு இரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டும், கிரிவலம் சென்று ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் மாலை திரும்புகின்றனர். அதுவரை வீட்டில் இருந்து எங்களால் வெளியே வர முடியவில்லை. அவசர தேவைக்குக்கூட ஆம்புலன்ஸ் வருவதற்கு, வீதிகளில் இடவசதி இல்லை.

எனவே, சென்னை விமான நிலையம் உட்பட பிரபல வணிக வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ளது போன்று ‘கார் பார்க்கிங்’ கட்டிடம் அமைக்கப்பட வேண்டும். அதுவரை, கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் இடங்களை பயன்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். கார் பார்க்கிங் விவகாரத்தில் உள்ளூர் அமைச்சரான எ.வ.வேலு கூடுதல் கவனம் செலுத்தி, உள்ளூர் மக்களின் வேதனையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE