புதுக்கோட்டையில் பெருங்கற்கால ஈமச் சின்னமான ‘விசிறி பலகை’ கண்டெடுப்பு

By KU BUREAU

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே கல்லால் ஆன விசிறி பலகையை வரலாற்று ஆய்வாளர்கள் நேற்று கண்டெடுத்தனர். கற்பதுக்கை, கற்திட்டை, கற்குவியல், கல்வட்டம், நெடுங்கல், குத்துக்கல், தொப்பிக்கல், விசிறி பலகை போன்ற பெருங்கற்கால ஈமச் சின்னங்களை உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களில் வைப்பது வழக்கமாக இருந்தது.

இதனடிப்படையில், விசிறி பலகையைத் தவிர, மற்றவை புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. தற்போது, மாவட்டத்தில் இதுவரை கிடைக்காமல் இருந்த விசிறி பலகை, பெருங்களூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை, அரியவகை ஈமச் சின்ன அடையாளமாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பெருங்களூரில் ஆய்வின் மூலம் விசிறி பலகையைக் கண்டெடுத்த புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் புதுகை பாண்டியன் கூறியது: உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் நடப்படும் விசிறி பலகை, மனித உருவில் செதுக்கப்பட்டிருக்கும். தென்னிந்தியாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில்தான் இதுவரை விசிறி பலகை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மோட்டூர், விழுப்புரம் மாவட்டம் உடையார்நத்தம் ஆகிய இடங்களில் விசிறி பலகை ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி வெள்ளவெட்டான் விடுதிக்கும், மட்டையன்பட்டிக்கும் இடையே உள்ள வீரன் காளி பொட்டல் என்ற இடத்தில் தற்போது கிடைத்துள்ளது. அந்த இடத்தில் குத்துக்கற்கள், தாழிகள், கற்குவியலும் காணப்படுவதால், 5 ஏக்கரில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இடமாக விளங்கியிருக்கலாம்.

சாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த விசிறி பலகை, 180 செ.மீ. உயரம், 86 செ.மீ. அகலத்தில் உள்ளது. அதில், கையைப் போன்ற பகுதி மட்டும் சேதமடைந்துள்ளது. இதை, புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவம் மற்றும் டெல்டா எக்ஸ்புளோரர்ஸ் ஆகிய அமைப்பினர் இணைந்து, அதே இடத்தில் பாதுகாப்பாக நட்டு வைத்துள்ளனர். பொதுவாக, விசிறி பலகையை அம்மன் வழிபாட்டுக்கான உருவமாக பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.

விசிறி பலகையை தோண்டியெடுத்து, மீண்டும் நட்டுவைக்கும் பணியில் புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று நடுவத்தின் செயலாளர் இந்திரஜித், உறுப்பினர் ராஜகோபால், ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கர், ஊராட்சி உறுப்பினர் செந்தில்ராஜ் மற்றும் முனுசாமி, பெருங்களூர் யோகேஸ்வரன், கோகுல், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE