புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து தனது மனைவி கடுமையான உணவு முறையை பின்பற்றி புற்றுநோயை முறியடித்ததாக சொன்ன நிலையில், இது "நிரூபிக்கப்படாத மருத்துவம்" என்று புற்றுநோயியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சித்து தனது மனைவி நவ்ஜோத் கவுர், எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி 4 ஆம் நிலை புற்றுநோயை வென்றார் என்று தெரிவித்தார். உயிர் பிழைக்க 5% வாய்ப்பு அளிக்கப்பட்ட கவுர், 40 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
தனது மனைவியின் உணவில் மஞ்சள், வேப்பம்பூ தண்ணீர், ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை தண்ணீர் ஆகியவை சேர்த்துக்கொண்டார் என்று சித்து கூறினார். மேலும், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை கண்டிப்பாக தவிர்த்து டயட் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரரின் கருத்துகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று டாடா மெமோரியல் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சிஎஸ் பிரமேஷ் கடுமையாக சாடினார். அவர், “பால் பொருட்கள் மற்றும் சர்க்கரையை சாப்பிடாமல் பட்டினி கிடப்பது. மஞ்சள் மற்றும் வேம்பு சாப்பிடுவது அவரது 'குணப்படுத்த முடியாத' புற்றுநோயை குணப்படுத்த உதவியது என்பதை சித்துவின் வீடியோ குறிப்பிடுகிறது. இந்த கருத்துகளை ஆதரிக்க ஆதாரம் இல்லை" என்றார்.
» ராமநாதபுரம் அருகே பாலத்தில் கார் மோதி விபத்து - திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
» இரு முன்னாள் முதல்வர்களின் மகன்கள் தோல்வி - கர்நாடகாவில் காங்கிரஸ் முழுமையான வெற்றி!
இந்த அறிக்கையில் டாடா மெமோரியல் மருத்துவமனையின் தற்போதைய மற்றும் முன்னாள் புற்றுநோயியல் நிபுணர்கள் 262 பேர் கையெழுத்திட்டனர். வேம்பு மற்றும் மஞ்சளை புற்றுநோய் எதிர்ப்புக்காக பயன்படுத்த பரிந்துரைக்க மருத்துவ தரவு எதுவும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயாளிகள் நிரூபிக்கப்படாத மருந்துகளைப் பின்பற்றி சிகிச்சையைத் தாமதப்படுத்த வேண்டாம் என்று புற்றுநோயியல் நிபுணர்கள் வலியுறுத்தினர். "புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் மற்றும் புற்றுநோய்க்கான நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகளில் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை அடங்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.