கும்பகோணம்: பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷனில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும் எனவும், அந்த வெல்லத்தை வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்யாமல், இங்குள்ள சர்க்கரை ஆலையிலேயே தயாரித்து வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, கரும்பு, ஏலக்காய், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கி வருகிறது.
இதில், சர்க்கரைக்கு பதிலாக பொங்கல் வைக்க பயன்படும் வகையில் வெல்லம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், தமிழக அரசு கண்டு கொள்ளாததால், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தற்போது போதிய கால அவகாசம் இல்லாததால், அடுத்தாண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில், நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டும் என தமிழக அரசை காவிரி விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
» சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் குருபூசை விழா - பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள்!
» ரயில்வே தொழிற்சங்க தேர்தல்: முதன்முறையாக களமிறங்கும் பாஜக சார்பு சங்கங்கள்!
இதுதொடர்பாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் கூறியது: கடந்த ஆண்டு நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்.
ஆனால், அதற்கான அறிவிப்பை வெளியிடாமல், மகாராஷ்ட்ராவில் இருந்து கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், கூடுதல் செலவாகும் என்பதால், இங்குள்ள சர்க்கரை ஆலையில் வெல்லம் தயாரித்தால் செலவு மிச்சமாகும்.
தற்போது வெளிச்சந்தையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.36-க்கும், வெல்லம் ரூ.64-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கலுக்கு இன்னமும் 55 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்டமைப்புகளும் உள்ள, தமிழக அரசுக்குச் சொந்தமான தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில், கிலோ ரூ.24 என்ற விலையில் வெல்லம் தயாரிக்க முடியும். இதனால், சர்க்கரை ஆலைக்கும் நல்ல லாபம் கிடைக்கும். எனவே, தமிழக அரசு இதுதொடர்பாக பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொடர்புடைய அரசுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொங்கல் பண்டிகைக்கு வெல்லம் வழங்குவதும், வாங்குவதும், தமிழக அரசின் கொள்கை முடிவாகும்’’ என தெரிவித்தனர்.