திருவண்ணாமலை அருகே வேடந்தவாடியில் தயாராகும் அகல் விளக்குகள் - என்ன சிறப்பு?

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருகே வேடந்தவாடியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது.

இவ்வூரில் அண்ணாமலையார் கோயில் மற்றும் ‘மலையே மகேசன்' என போற்றியும், மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை அருள்பாலிக்கிறது. நினைக்க முக்தி தரும், இந்த புண்ணிய தலத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் உலக பிரசித்தி பெற்றது, கார்த்திகை தீபத் திருவிழாவாகும்.

உலகெங்கும் வாழும் இந்துக்கள், கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என தாங்கள் வாழும் இடங்களில் ‘அகல் விளக்கு’ ஏற்றி, ஜோதி வடிவமாய் காட்சி தரும் திரு அண்ணாமலையாரை வணங்குகின்றனர்.

அதன்படி, இந்தாண்டு கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் டிச.13-ம் தேதி நடைபெறவுள்ளது. 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். முன்னதாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படும்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், ‘அகல் விளக்கு’ தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள், குடும்பமாக ஒருங்கிணைந்து அகல் விளக்கை தயாரித்து வருகின்றனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே வேடந்தவாடி கிராமத்தில் முருகேசன், ராமலிங்கம் மற்றும் சேகர் குடும்பத்தினர் ‘அகல் விளக்கு’ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, “மண்பாண்ட தொழிலுக்கு ஏரியில் இருந்து களிமண் எடுத்து கொள்ள அரசு அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாட்டு வண்டியில் மண் ஏற்றி வருகிறோம். இதற்கு, ரூ.500 வரை வாடகை கொடுக்கப்படுகிறது.

நாங்கள், பாரம்பரியமான ஒரு முகம் அகல் விளக்கை மட்டுமே தயாரிக்கிறோம். மண் கொண்டு வந்தபிறகு, அதனை பதப்படுத்த வேண்டும். இது சற்று சிரமமாக இருக்கும். மண்ணை பதப்படுத்த இயந்திரம் வந்தாலும், பொருளாதார வசதி இல்லாததால், மனித உழைப்பு மூலமாகவே மண்ணை பதப்படுத்துகிறோம்

உலர வைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள்.

.பின்னர், சக்கரத்தை சுழற்றி பதப்படுத்தப்பட்ட களிமண்ணை கொண்டு, அகல் விளக்கு தயாரிக்கப்படுகிறது. ஒருவர், தினசரி 350 முதல் 400 அகல் விளக்குகளை தயாரிக்கின்றோம். அதன்பிறகு, அகல் விளக்கை நன்றாக உலர வைத்து, நெருப்பை மூட்டி மிதமான சூட்டுடன் வேக வைக்கிறோம். இதில், 90 சதவீத அகல் விளக்குகள் தரமாக கிடைத்துவிடும்.

இத்தொழிலில் குடும்பமாக இணைந்து செயல்படுகிறோம். கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு, ஒரு குடும்பத்தினர் 10 ஆயிரம் அகல் விளக்குகள் வரை தயாரிக்கின்றோம். இதற்காக ஒரு மாதம் உழைப்போம். ஒரு அகல் விளக்கு சில்லறை விலையில் ரூ.2.50 வரையும், மொத்தமாக வாங்குபவர்களுக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரையும் விற்பனை செய்கிறோம்.

இத்தொழிலில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடையாது. சொற்ப வருவாயே கிடைக்கிறது. தொழிலை விட்டுவிடக் கூடாது என்பதற்காக செய்து வருகிறோம். இயந்திரம் மூலம் அச்சு விளக்கு, தயாரிக்கப்படுவதால், பாரம்பரியமாக செய்யப்படும் அகல் விளக்குகளின் விற்பனை பாதிக்கப்படுகிறது. கிராமங்களுக்கு நேரிடையாக சென்றும் விற்பனை செய்கிறோம். அகல் விளக்குகளுக்கு பலரும் பணம் கொடுத்து விடுவார்கள்.

ஒரு சிலர், பழமை மாறாமல் பண்டைய கால முறைப்படி, அவர்களிடம் உள்ள மணிலா உள்ளிட்ட தானியங்களையும் கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர். இதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மழை காலங்களில் மண்பாண்ட தொழில் பாதிக்கப்படுவதால், இத்தொழிலையே நம்பி உள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE