மதுரை: சிக்கலுக்கும், மனக் குழப்பத்திற்கும் திருக்குறளில் தீர்வு உண்டு என உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் கூறியுள்ளார்.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து “எல்லைகளை தாண்டி எல்லா இடங்களிலும், வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரியின் முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தொடக்க உரையாற்றினார். துணை முதல்வர் நிம்மா எலிசபெத் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சிவஞானம் பேசியதாவது: “பெண்கள் சுதந்திரம் பாதுகாப்பாக வாழவும், வன்முறை இல்லாத உலகை உருவாக்கவும் அழைப்பு விடுக்கும் தொடக்க நிகழ்வாக இதை பார்க்கிறேன். வாழ்க்கை வாழ்வதற்குதான். வாழ்க்கை இன்பமானது. நாம் வாழும் வாழ்க்கையை நாமே காயப்படுத்தி கொள்கிறோம். படிப்பு வாழ்க்கையின் இன்பத்திற்கு உதவாது. மாணவர்கள் விழுப்புணர்வோடும், அறிவோடும் வாழ்ந்தால் நிச்சயம் வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்ளலாம்.
எனது வாழ்கையில் அனைத்து காரியங்களுக்கும் திருக்குறளில் மட்டுமே தீர்வு கண்டுள்ளேன். ஆணுக்கு பெண்ணும் , பெண்ணுக்கு ஆணும் கட்டாயம் துணை வேண்டும். சினத்தை அடக்காவிட்டால் பகைவன் இல்லாமலே உங்களை நீங்களே அழித்து கொள்வீர்கள். உங்கள் அறிவு நல்லதை சார்ந்தே இருக்க வேண்டும். அனைவரும் உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டும் எந்த சிக்கல்களுக்கும் மனக் குழப்பத்திற்கும் திருக்குறளில் மட்டுமே தீர்வு உண்டு” என்று நீதிபதி சிவஞானம் கூறினார்.
» பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி: உடுமலை, மடத்துக்குளம் விவசாயிகள் கவலை
» பாதாள சாக்கடை அடைப்புகளை கண்டறிய ‘ரோபோ’ - மதுரை மாநகராட்சியில் பரிசோதனை முயற்சி
மாநகர போக்குவரத்துக் காவல் துணை ஆணையார் வனிதா பேசும்போது, “14 ஆண்டுக்கு முன்பு நடந்த ஒரு உண்மையான வழக்குக் கதையை கூறி பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை தைரியமாக வெளியில் கூற வேண்டும். மாணவர்களுக்கு நடக்கும் பிரச்சினைகள் மட்டுமின்றி குடும்பத்தில் ஏதேனும் பிரச்சியை என்றாலும் நாங்கள் உதவி செய்துகொடுப்போம் என முதல் முதலில் கூறி நான் கேள்விப்பட்டது லேடி டோக் கல்லூரியில் மட்டும்தான்” என்று வனிதா கூறினார்.
உயர்நீதிமன்றம் மதுரை அமர்வின் மூத்த வழக்கறிஞரான சாமிதுரை, பெண்கள் வன்முறைக்கு எதிரான புகார் மற்றும் அதற்கான தீர்வு குறித்து பேசினார். கல்லூரியின் பொருளாளர் வனிதா மலர்விழி நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாணவிகள், பேராசிரியைகள் பங்கேற்றனர்.