பாதாள சாக்கடை அடைப்புகளை கண்டறிய ‘ரோபோ’ - மதுரை மாநகராட்சியில் பரிசோதனை முயற்சி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பரிசோதனை முறையில் பாதாள சாக்கடை (UGD) அடைப்புகளையும், கழிவுநீர் கசிவுகளையும் செயற்கை நுண்ணறிவு முறையில் கண்டுபிடிக்கும் ‘ரோபோ’ முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால், இந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்றுவதற்கான கட்டமைப்பு முழு அளவில் இல்லை. புறநகர் 28 வார்டுகளில் தற்போது புதிய பாதாள சாக்கடை கட்டமைப்பு (UGD) வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பழைய 72 வார்டுகளில் பாதாளசாக்கடை திட்டம் இருந்தாலும், இந்த திட்டம், மதுரை நகராட்சியாக இருந்தபோதும், மாநகராட்சியானபோது எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 50 ஆண்டிற்கு முன் நிறைவேற்றப்பட்ட பழைய கட்டமைப்பிலே உள்ளன. அதன் வரைப்படம் கூட தற்போது மாநகராட்சியில் இல்லை.

பழைய மாநகராட்சியில் பணிபுரிந்த சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது பணிபுரியும் ஊழியர்களால் எந்த இடத்தில் பாதாள சாக்கடை அடைப்பு, கசிவு ஏற்பட்டது என்பதை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இந்த அடைப்பை சரி செய்ய, அந்த சாலையில், தெருவில் உள்ள பாதாள சாக்கடை குழாய் இணைப்பு அனைத்தையும் தோண்டி எடுக்க வேண்டிய உள்ளது.

அதனால், அந்த சாலை, தெருக்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. சாலைகள் சேதமடைந்து அதனை மறுபடியும் சீரமைக்க வேண்டிய உள்ளது. அதனால், மாநகராட்சி நிதியிழப்பும், அதிகபடியான மனித உழைப்பும் வீணாகி வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், எப்படியாவது பாதாள சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி எடுத்து வருகிறார்.

அதன் அடிப்படையில் தற்போது செயற்கை நுண்ணறிவு முறையில் ‘ரோபோ’ உதவியுடன் பாதாள சாக்கடை குழாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நுட்பமாக கண்டறிந்து சரி செய்வதற்கான நடவடிக்கை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மதுரை மாநகராட்சி பரிசோதனை முறையில் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த ரோபோ-வை, பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்ட குழாயில்விட்டு செயற்கை நுண்ணறிவு மூலம் அதனை இயக்கி, எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிகிறார்கள்.

அதன் பின் அடைப்பு ஏற்பட்ட பகுதியை தோண்டி உடனுக்குடன் பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்யப்படுகிறது. வழக்கமாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படும் இடங்களில் 15 இடங்களில் தோண்ட வேண்டும். இந்த முறையில் ஒரே இடத்தில் தோண்டி பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யலாம். முதற்கட்டமாக இந்த செயற்கை நுண்ணறிவு ரோபா மூலம் பாதாள சாக்கடை அடைப்பு, கசிவு சரி செய்யும் பணி, இப்பிரச்சனை அதிகமுள்ள வைகை கரை வார்டுகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“பரிசோதனை முறையில் குறிப்பிட்ட இடங்களில் இந்த பணி நடக்கிறது. அதை வெற்றிகரமாக நடக்கும் பட்சத்தில் 100 வார்டுகளிலும் மாநகராட்சியே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE