மதுரை: நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு மாரடைப்பை ஏற்படுத்துகிறது என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ சுந்தரேஸ்குமார் கூறியுள்ளார்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது புதன்கிழமை அனுசரிக்கப் படுகிறது. அதன் ஒருபகுதியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் அடைப்பு நோய் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், நுரையீரல் சிகிச்சைப்பிரிவு தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ்குமார் கலந்து கொண்டு இந்த நோயைப் பற்றியும், எப்படி நமது நுரையீரலை பாதுகாப்பது என்பது பற்றியும் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது,"நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயில் இருமல், சளி, மோசமாகிக்கொண்டே வரும் மூச்சுத் திணறல் ஆகியவை முக்கிய உடல் உபாதைகளாக இருக்கும். இந்த நோயானது நுரையீரலை மட்டுமின்றி எலும்புகளின் கடினத்தன்மை குறைதல், தசைகளின் உறுதித்தன்மை குறைதல், மனச்சோர்வு, மாரடைப்பு போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது. எனவேதான் உலகம் முழுவதும் மக்கள் இறப்பிற்கு மூன்றாவது முக்கிய காரணமாக இருக்கிறது.
மக்களிடம் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) தினம் அனுசரிக்கப் படுகிறது. மேலும் இந்த ஆண்டு ‘உங்கள் நுரையீரல் செயல்திறனை தெரிந்துகொள்ளுங்கள்’ (Know your lung function) என்ற கருத்தை வலியுறுத்துகிறது. நாம் நம்முடைய நுரையீரல் செயல்திறன் அறிந்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆண்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
» கார்த்திகை தீபத் திருவிழா: திண்டுக்கல்லில் தயாராகும் சுட்டி விளக்குகள் முதல் குபேர விளக்குகள் வரை!
» தொண்டி அருகே இடையமடம் சமண பள்ளி தொல்லியல் சின்னமாக பாதுகாக்கப்படுமா?
மிகக்குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தை, குழந்தை பருவத்தில் அடிக்கடி ஏற்பட்ட நுரையீரல் வைரஸ் தொற்று, புகை, நுரையீரல் காச நோய்க்கு பின்பு, உடலில் சில வேதிப்பொருட்கள் குறைபாடு, தொழில் சார்ந்த மாசு ஆகியவை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) வருவதற்கு காரணமாக இருந்தாலும் சிகரெட் புகைப்பது என்பதே முதற்காரணமாக இருக்கிறது என்பதால் இந்த நோயை வரும்முன் காப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனவே புகையிலை புகைக்காமல் இருப்பது, சத்தான காய்கறிகள் சாப்பிடுவது,தினமும் உடற்பயிற்சி செய்தல், வீடு மற்றும் வேலை பார்க்கும் இடம் நல்ல காற்றோட்டமாக இருப்பது ஆகியவை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ( COPD) வருவதை தவிர்க்கும். நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் (COPD) பாதிக்கப்பட்டவர்கள் புகையிலை புகைப்பவர்களாக இருந்தால் முதலில் அதை நிறுத்த வேண்டும். நிறுத்த இயலாதவர்கள் நுரையீரல் மருத்துவரின் உதவியை நாடலாம்.
மேலும் மருத்துவரின் ஆலோசனையின் படி உடற்பயிற்சியுடன், தேவைப்பட்ட இன்ஹேலர் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சிரமப்படுபவர்கள் நீண்ட நாள் ஆக்ஸிஜன் ஆதரவுடன் இருக்க வேண்டிய சூழல் இருக்கலாம். எனவே வீட்டிலிருந்தபடியே மருத்துவரின் ஆலோசனைப்படி ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்ளும் அளவிற்கு தற்போதைய அறிவியல் வளர்ந்துள்ளது. ஆண்டிற்கு ஒரு முறை இன்புளுயன்சா தடுப்பூசியும், நியூமோகாக்கல் தடுப்பூசியும் போட்டுக்கொள்வது நுரையீரல் கிருமித் தொற்றினால் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை எடுக்கும் நிலையை தவிர்க்கும்" என்று டீன் சுந்தரேஸ்குமார் பேசினார்.
இந்நிகழ்வில், மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், நிலைய அலுவலர் சரவணன், நுரையீரல் மருத்துவத் துறை மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு மாணவர்கள், செவிலியர்கள், ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி மருத்துவர் மகேஸ்குமார் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.