மதுரை: மதுரை அருகே 13-ம் நூற்றாண்டு பிற்காலப் பாண்டியர் கால கண்ணாழ்வார் கோயில் மண்ணில் புதையுண்டு வருகிறது. மதுரை மாவட்டம் திருமோகூர்-திருவாதவூர் சாலையில் ஆம்பூர் அருகே மருதூரில் கண்ணாழ்வார் கோயில் உள்ளது. இரு சுவாமி சந்நிதிகள் மற்றும் அம்மன் சந்நிதியுடன் இருந்த இக்கோயில் பாழடைந்து மண்ணில் புதையுண்டு வருகிறது. அம்மன் சந்நிதி இருந்த இடத்தில் சுவாமி சிலை உடைந்த நிலையில் உள்ளது.
இதுகுறித்து சிற்பத் துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் அறிவுச் செல்வம் ஆகியோர் கூறியதாவது, “ கருவறை, நான்கு தூண்கள் கொண்ட முன் மண்டபம், பக்கவாட்டில் அம்மனுக் கென தனி கருவறை என முழுவதும் கருங்கல்லால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
கல்ஹாரம் மட்டுமே கொண்ட பாண்டியர்கள் பாணிக்கே உரிய கட்டிடக் கூறுகளைக் கொண்ட எளிமையான கற்றளிக் கோயில் இது. பெண் தெய்வம் இருந்த கருவறையில் நான்கு கரங்கள் கொண்ட கண்ணாழ்வார் சுகாசனத்தில் சங்கு சக்கரத்துடன் எளிமையான பீடத்தின் மீது உள்ளார். கோயிலானது நீர் பிடிப்பு அதிகம் கொண்ட வயல்வெளியின் நடுவில் கட்டப்பட்டுள்ளது.
கோயில் கருவறையின் மேல் பகுதி முழுவதும் இடிந்து விழுந்துள்ளது. தூண்கள் மற்றும் கோயில் கட்டிடத்தின் எஞ்சிய பாகங்கள் கோயில் வளாகம் முழுவதும் விரவிக் கிடைக்கின்றன. இக்கோயிலில் உள்ள கல்வெட்டில், ‘கண்ணாழ்வார் கோயில்’ என்றழைக்கப்பட்ட இக்கோயி லுக்குத் திருகாராயணநல்லூர் தேவதான இறையிலியாக அளிக்கப்பட்டதைக் கூறுகிறது.
» மங்களூரு நீச்சல் குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் மரணம் - ரிசார்ட் உரிமையாளர், மேலாளர் கைது
» 15 ஆண்டாக சாலை, குடிநீர் வசதி இல்லை - காஞ்சிபுரம் விஜயலட்சுமி நகர் மக்கள் ஆதங்கம்
மேலும் ‘மலைக்குடி மலைமேல்கோல்' என்ற நில அளவுகோல் பற்றியும் கல்வெட்டு தெரிவிக்கிறது. திருமுற்றம், திருநந்தவனம், தீர்த்தக்குளம் ஆகியவை பனங்காடியான ராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்து சபையாரிடமிருந்து பெற்று அனுபவித்து வரப்பெற்றது, கண்ணாழ்வார் என்று அழைக்கப்பட்ட இக் கோயில் இறைவனுக்கு திருப்படி மாற்றுள்ளிட்ட செலவினங்களுக்காக நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.