குமரியில் காளான் வளர்ப்பு தொழில் மூலம் வருவாய் ஈட்டும் சுய உதவிக்குழு பெண்கள்!

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுயஉதவிக் குழு பெண்கள் காளான் வளர்த்து அதன் மூலம் தங்களது வாழவாதாரத்துக்கு வருவாய் ஈட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசு வழங்கும் நிதியுதவி மூலம் காளான் வாளர்ப்பு பயிற்சி பெற்ற பெண்கள், காளான் வளர்த்து அவற்றை பல்பொருள் அங்காடியிலும், சந்தைகளிலும் விற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். தற்போது உணவு காளானுக்கு தேவை அதிகரித்து வருவதால் வீடுகளில் உள்ள சிறிய அறைகளிலேயே காளான்களை வளர்க்கின்றனர்.

காளான் வளர்ப்பு தொழிலில் பயனடைந்து வரும் திருப்பதிசாரத்தை சார்ந்த திருவாழி மார்பன் சுயஉதவிக்குழு உறுப்பினர் வேணி தெரிவித்ததாவது: திருப்பதிசாரம் திருவாழி மார்பன் சுய உதவிக்குழுவை சேர்ந்த நானும் எனது ஊரைச் சேர்ந்த சத்யா, சுபா, லட்சுமி ஆகிய நால்வரும் காளான் வளர்ப்பு தொழிலில் ஈடுபட பயிற்சி மற்றும் நிதியுதவி அளிக்குமாறு பூதப்பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்தோம்.

அந்த இயக்கத்தின் வழிகாட்டுதலில் காளாண் வளர்ப்பு தொடர்பாக ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைத்தது. பயிற்சியில் காளான்வளர்ப்பது எப்படி?, காளான் வளர்ப்புக்கான கூடாரம் அமைத்தல், எப்போதும் ஒரே சீரான வெப்பநிலையை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்?, நோய் தொற்று எப்படி ஏற்படும்? முன்னெச்சரிக்கை மற்றும் விளைச்சல் பாதிக்கப்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தெரிந்து கொண்டோம்.

மேலும் காளாண் விதை உற்பத்தி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டோம். ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பண்ணை சார் தொகுப்பு திட்டத்தின் கீழ் காளாண் வளர்ப்பு அலகு அமைத்திட ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார்கள். கிலோ ரூ.300-க்கு விற்பனை தற்போது திருப்பதிசாரம் ஊராட்சி கிராம பொது சேவை மையத்தின் ஒருபகுதியில் உற்பத்திக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி காளாண் உற்பத்தி செய்து வருகிறோம்.

ஒரு சுழற்சிக்கு 45 பைகள் வீதம் காளாண் உற்பத்தி தொடங்கப்படுகிறது. பை ஒன்றுக்கு அதிகபட்சம் ஒன்றரை கிலோ வீதம் விளைச்சல் கிடைக்கிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.300 வீதம் விற்பனை செய்கிறோம். உள்ளூர் மக்களிடம் விற்பனை செய்வதுடன் நாகர்கோவில் சந்தையில் உள்ள கடைகளுக்கும் விற்பனை செய்கிறோம். சுழற்சி ஒன்றுக்கு ரூ.20,000 முதல் ரூ.23,000 வரை வருமானம் கிடைக்கிறது. வீட்டு வேலை மற்றும் இதர வேலைகளோடு காளான் வளர்ப்பு எங்களுக்கு பகுதி நேர வருமானம் தருகிறது. அடுத்தகட்டமாக உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகப்படுத்த ஆர்வமாக உள்ளோம். என் போன்ற சாதாரண குடும்ப பெண்களும் தொழில் முனைவோராக மாறுவதற்கு இது நல்ல வாய்ப்பு என்றார்.

காளான் வளர்க்கும் சுயஉதவிக் குழு பெண்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பாராட்டினார். அவர் கூறும்போது, ‘‘ தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வறுமையை குறைத்து வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் குமரி மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களில் இணைந்த பெண்களுக்கு கைவினைப்பொருட்கள் தயாரித்தல், உணவு பதப்படுத்துதல், காளான்வளர்ப்பு குறித்த பயிற்சிகள், சந்தைப்படுத்துதல், அச்சகம், நர்ஸரி உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பயிற்சிகள் முடிந்த பின் அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு சுழல் நிதி, சமூக முதலீட்டு நிதி, நலிவு குறைப்பு நிதி மற்றும் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்ட நிதி என பல்வேறு வகையான நிதியுதவிகள் தமிழ்நாடு அரசின் மூலம் அளிக்கப்படுகிறது. மேலும் நிதி சுழற்சியை அதிகப்படுத்தும் வகையில் வங்கிக்கடன், தனி நபர் தொழில் முனைவு கடன் வசதிகள் வங்கிகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவற்றை பெண்கள் பயன்படுத்தி பொருளாதாரத்தை பெருக்கி வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முயல வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE