காக்க... காக்க... கல்லீரல் காக்க... முக்கிய ஹெல்த் டிப்ஸ்!

By KU BUREAU

சென்னை: நமது உடலில் வலதுபுற மார்புக்கு கீழ் பகுதியில் உள்ள கல்லீரல், உடலின் மிகப் பெரிய உறுப்பாகும். உணவு, நீர் ஆகியவற்றின் வழியே உடலுக்குள் செல்லும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடலை சமநிலையில் வைத்திருப்பது கல்லீரலின் முக்கிய பணி.

இதன் செயல்பாடு, பாதுகாப்பு குறித்து திருச்சி ஸ்வேதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் எஸ்.என்.கே.செந்தூரன் கூறியது: உடலின் செரிமானத்துக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதுடன், உடலில் உருவாகும் கழிவுப் பொருட்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் நாம் சாப்பிடும் அதிகப்படியான, தேவையற்ற மருந்துகளை வெளியேற்றும் முக்கிய பணியை கல்லீரல் செய்கிறது.

உடல் உறுப்புகளில் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளின் பாதிப்பு உடனடியாக தெரிந்து விடும். ஆனால், மிகவும் பொறுமையாக செயல்படும் உறுப்பு கல்லீரல். அதனால் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் தன்னால் முடிந்தவரை இயங்கும். முடியாதபட்சத்தில்தான் அறிகுறிகள் வெளிப்படும். செரிமானம், தேவையற்ற பொருட்களை நீக்குவது உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்து வரும் கல்லீரல் தனக்கு ஏற்படும் பாதிப்பை தானே சரிசெய்து கொள்ளும் தன்மை வாய்ந்தது.

மருத்துவர்
எஸ்.என்.கே.செந்தூரன்

கல்லீரல் பாதிப்பு முற்றிய நிலையில்தான் வெளியில் தெரியும். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்பட்ட உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் போன்ற காரணங்களால் கல்லீரலில் சேரும் கொழுப்பால், கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், தேவையற்ற மருந்துகள், உடல் பருமன், மது ஆகியவற்றை தவிர்ப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் கல்லீரலை பாதுகாக்கலாம். ஹெப்பாடைடிஸ் ஏ வைரஸ் மூலம் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து சாப்பிட தேவையில்லை. ஹெப்பாடைடிஸ் பி, சி உள்ளிட்ட வைரஸ் பாதிப்புக்கு மருத்துவர்களை ஆலோசிக்க வேண்டும் என்றார்.

பிளாக் காஃபி நல்லது: கல்லீரல் பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, 8 மணி நேரம் ஆழ்ந்த துாக்கம், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்தல் போன்றவற்றால் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும். கல்லீரலுக்கு மட்டுமல்லாது, முழு உடல் ஆரோக்கியத்துக்கும் ஆழ்ந்த தூக்கம் அவசியம். அத்துடன், தினமும் சர்க்கரை மற்றும் சிக்கரி கலக்காத காஃபி (பால் கலக்காமல்) அருந்துவது நல்லது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE