தமிழக அரசு மருத்துவமனைகளில் ‘போதை நீக்கு மையம்’ அமைப்பது ஏன் அவசியம்?

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: வீட்டில் தாயார் இல்லாத நிலையில் எதிர்கால கனவுகளை சுமந்துகொண்டு, திருப்பூர் விஜயாபுரம் பள்ளிக்கு சென்று வந்தவர் வீ.சாதனா. வயது 13. 9-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்து வந்தார். படிப்பில் படுசுட்டியான இவர், தந்தையுடன் வாழ்ந்து வந்தார். தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்ததால், வீட்டில் இருந்த தாத்தாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று வந்தாள்.

ஒரு கட்டத்தில் குடிபோதைக்கு அடிமையான தந்தை வீரப்பன், கடந்த 12-ம் தேதி வீட்டில் இருந்த சாதனா மற்றும் அவரது தந்தையுடன் தகராறு செய்துள்ளார். இதில் விரக்தியடைந்த சிறுமி, கடந்த 12-ம் தேதி விஜயாபுரம் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக சாதனாவின் ஆசிரியர்கள் கூறும்போது, “நன்றாக படிப்பவர். வீட்டில் இவ்வளவு பிரச்சினைக்கு இடையேதான் படிக்க வந்தார் என்பது இப்போதுதான் தெரிகிறது. குடும்ப சூழ்நிலை எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல், பள்ளி தோழிகளிடம் மிகவும் கலகலப்பாக பழகுவார். கலைத் திருவிழாவில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். வீட்டு வேலைகளை செய்தபடி, பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே பள்ளிக்கு வந்திருக்கிறார். கல்வியில் ஊக்கம் தந்திருந்தார், நல்ல நிலைக்கு சென்றிருப்பார்” என்றனர்.

குடிநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சொல்கின்றனர் தனியார் மீட்பு மையங்களில் பணியாற்றுபவர்கள். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “இன்றைக்கு தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில், சர்வசாதாரணமாக குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது. சிறுவர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் குடிக்கின்றனர். வீட்டில் உள்ளவர்களின் குடி நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி சாதனா போன்று வீதிக்கு, வீதி குழந்தைகளும், குடும்பங்களும் ஏராளமாக உள்ளன. குடிப்பவர்களை அவ்வளவு எளிதில் மாற்ற இயலாது.

தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் மீட்பு சிகிச்சை முறைகள் இருந்தால் மட்டுமே, இவர்களால் முழுமையாக மீள முடியும். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மதுபானக் கடைகள் இருக்கும் அளவுக்கு, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மீட்பு சிகிச்சை முறைகள் இல்லை என்பது பெரும் வேதனை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதை நீக்கு மையத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, “திருப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களில், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பலரும் முறையே வேலைக்கு வருவதில்லை. இதனால் தொழில்துறையும் பாதிக்கப் படுகிறது. தங்களுக்கு உரிய நேரத்தில் ஆர்டர் களை முடிக்க வேண்டிய தேவை இருப்பதால், தொழிலாளர்களுக்கு தேவையான மதுவை வாங்கி கொடுத்துவிட்டு, நாள்தோறும் வேலைக்கு அழைத்து வருபவர்களும் உண்டு.

அந்தளவுக்குகுடி, சமூகத்தில் ஒரு தீய அங்கமாக உருமாறியுள்ளது” என்றார். திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் பா.சு.மணிவண்ணன் கூறும்போது, “இன்றைக்கு மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பதை தாண்டி, ஒவ்வொரு வீட்டுக்கும் கேடாக மாறி வருகிறது. எதிர்கால சமூகத்தை காக்க, மதுவிலக்கு விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE