சேலம் மத்திய சிறையில் இயங்கிய கருமார் கூடம் புழலுக்கு மாற்றம் - மாதம் ரூ.30,000 ஈட்டிய சிறைவாசிகள் கவலை

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் மத்திய சிறையில் இயங்கி வந்த கருமார் கூடத்தை (கொல்லன் பட்டறை) சென்னை புழல் சிறைக்கு மாற்ற சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளதால், மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் வரை வருவாய் ஈட்டி வந்த சிறைவாசிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மத்திய சிறை ஆங்கிலேயர் காலத்தில் 1862-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை அடைத்து பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கிய கொடூர சம்பவங்கள் சிறையில் நடந்துள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர் வஉசி உள்ளிட்ட பல தியாகிகள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, அங்குள்ள தொழில் கூடங்களில் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் 161 ஆண்டுகளாக இயங்கி வந்த கருமார் கூடத்தை (கொல்லன் பட்டறை) சென்னை புழல் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டறையில் பணியாற்றி மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வந்த 30-க்கும் மேற்பட்ட சிறைவாசிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் செந்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:சேலம் மத்திய சிறைச்சாலை கட்டுமானத்துக்காக இரும்புக் கதவுகள், ஜன்னல்கள், ஜன்னல் கம்பிகள் போன்றவற்றை தயாரிப்பதற்காக ஆங்கிலேயர்கள் சிறைச்சாலையின் வளாகத்திலேயே கருமார் கூடத்தை அமைத்தனர்.

இதற்கு தேவையான இரும்பு லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் இந்த கருமார் கூடத்தில் பணியாற்றியுள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கருமார் கூடம் தொடர்ந்து இயங்கி வருகிறது.

சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகள் தங்களது குடும்பத்துக்குத் தேவையான வருமானத்தை இங்கு பணியாற்றி தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் தொகையை அவர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதில் 30-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் தங்களது வேலைக்கு ஏற்ப ரூ.15,000 ஆயிரம் முதல் ரூ.30,000 வரை வருமானம் ஈட்டுகின்றனர்.

இந்நிலையில் சிறைத்துறை டிஜிபி சேலம் மத்திய சிறையில் இயங்கி வரும் கருமார் கூடத்தை சென்னை புழல் சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரின் இந்த முயற்சியானது சிறைவாசிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. காவல் துறை இயக்குநரின் திடீர் முடிவால், அடுத்த மாதத்தில் இருந்து தங்களது குடும்பத்திற்கு தேவையான வருமானத்தை எப்படி சம்பாதிப்பது என்று தெரியாமல் கைதிகள் அச்சமடைந்துள்ளனர்.

சிறைக்கு வெளியில் வேலையை மாற்றிக் கொள்வது போல அவ்வளவு எளிதாக சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளால் தங்களது வேலையை மாற்றிக் கொள்ள இயலாது. மேலும், சிறையில் உள்ள தறிக்கூடத்திற்கோ, பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, எழுதும் அட்டைகள் தயாரிப்பு உள்ளிட்டவற்றுக்கு மாறினாலும் முன்பு ஈட்டிய வருமானத்தை அவர்களால் ஈட்ட முடியாது.

எனவே, முதல்வர் ஸ்டாலின் கருமார் கூடத்தை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத்திடம் கேட்ட போது, சிறைத்துறை டிஜிபி உத்தரவின் படி சேலம் மத்திய சிறையில் உள்ள கருமார் கூடத்தை சென்னை புழல் சிறைக்கு மாற்றிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருமார் கூட தளவாடப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது, என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE