சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் அரசு துணை சுகாதார நிலையத்துக்கு ரூ 20 லட்சம் மதிப்புள்ள இடத்தை சேவுகன் குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் சேவுகன் என்பவரது 2 சென்ட் இடத்தில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இதை 60 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் காமராஜர் தொடங்கி வைத்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், இக்கட்டிடம் முற்றிலும் சேதமடைந்ததால் பூட்டப்பட்டது. இதனால் ஊராட்சி அலுவலகத்தில் சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. தற்போது செவிலியர் குடியிருப்புடன் கூடிய புதிய சுகாதார நிலையம் கட்டப்பட உள்ளது.
அதற்கு கூடுதலாக இடம் தேவைப்பட்டது. ஏற்கெனவே, 2 சென்ட் இடமும் தனியாருக்கு சொந்தம் என்பதால் துணை சுகாதார நிலையம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையறிந்த, சேவுகன் குடும்பத்தினர் ஏற்கெனவே கட்டப்பட்ட 2 சென்ட் இடத்தோடு கூடுதலாக 4.5 சென்ட் இடத்தையும் சேர்த்து தானமாக சுகாதார நிலையத்துக்கு வழங்க முன்வந்தனர்.
தற்போது அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும். நேற்று தான பத்திரத்தை பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானுவிடம் சேவுகன் குடும்பத்தினர் வழங்கினர். தானம் வழங்கிய சேவுகன் குடும்பத்தினரை வட்டார மருத்துவ அலுவலர், கிராம மக்கள் பாராட்டினர்.
» ஒவ்வொரு சிகரெட் புகைக்கும்போது வாழ்நாளில் 14 நிமிடம் குறைவதாக மருத்துவர் தகவல்
» கும்பக்கரை அருவியில் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்