ஒவ்வொரு சிகரெட் புகைக்கும்போது வாழ்நாளில் 14 நிமிடம் குறைவதாக மருத்துவர் தகவல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு நலவழித்துறை, வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர் நிகழ்ச்சி சுல்தான்பேட்டையில் உள்ள காயிதே மில்லத் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் துணை முதல்வர் கோதை தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சவுபாங்கி, சுகாதார ஆய்வாளர் மதிவதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை கலந்து கொண்டு பேசும்போது, புகையிலையில் நிக்கோடின் என்ற அடிமைப்படுத்தும் பொருள் உள்ளது. இது கஞ்சா, அபினை விட பல மடங்கு அதிக அடிமைப்படுத்தும் சக்தி வாய்ந்தது. வருடத்துக்கு10 லட்சம் பேர் இந்தியாவில் புகையிலைக்கு பலியாகிறார்கள்.

ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேர் பலியாகிறார்கள். வாய், குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் 90 சதவீதம் புகையிலை பழக்கத்தால் மட்டுமே வருகிறது. புகைப்பிடிப்பவர்களில் 89 சதவீதத்தினர் 18 வயதுக்குள் இந்த பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். புகையிலை பொருட்களில் புற்றுநோயை உருவாக்கும் 60 வகை நச்சுப் பொருட்கள் உள்ளது. மெல்லும் வகை புகையிலையான பான் பிராக், ஹான்ஸ் போன்றவற்றில் 3 ஆயிரம் வகையான நச்சுப் பொருட்கள் உள்ளன. பீடி, சிகரெட் போன்ற புகைக்கும் புகையிலையில் 4 ஆயிரம் வகையான நச்சுப்போட்டு உள்ளன.

புகையிலை பழக்கம் வாய், தொண்டை, நுரையீரல், மூச்சுக் குழாய், உணவு குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கணையம், கர்ப்பப்பை வாய் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுத்தும். புகையிலை நுரையீரல் கோளாறையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும். இதயம் மற்றும் ரத்தக்குழாய் தொடர்பான நோய்களை புகையிலை பழக்கம் தீவிரமாக்குகிறது. புகையிலை பழக்கத்தால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பால் மரணம் அடைகின்றனர். ஒவ்வொரு சிகரெட் புகைக்கும் போது வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது.

புகையிலை ஆண்களிடம் ஆண்மை குறைவையும், பெண்களிடம் மலட்டுத்தன்மையும் ஏற்படுத்துகிறது. புகைப்பிடிப்பவர் அனுமதிக்கும் நஞ்சை விட அருகில் இருந்து சுவாசிபவர்களுக்கு இரண்டு மடங்கு நஞ்சு பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் மறைமுக புகை பிடித்தல் மிகவும் ஆபத்தானது. மறைமுக புகை பிடித்தல் குழந்தைகளுக்கு புற்றுநோய், மாரடைப்பு, மூச்சு விடுதல் பிரச்சனை, கண் மூக்கு, தொண்டை எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

புகை பிடிப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம், ருசியின்மை, இருதய நோய், நுரையீரல் புற்று நோய், நாக்கு புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் ராமலிங்கம், சுகாதார உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராமப்புற செவிலியர் கண்மணி ஆகியோர் செய்து இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE