காங்கயம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெள்ளகோவில் பச்சா பாளையம் அருகே அமைந்துள்ள சிலம்பகவுண்டன்வலசு அரசு ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோ.பிரபாகர் தலைமை வகித்தார். பெற்றோரை இழந்த, ஒற்றை பெற்றோர் கொண்ட, பெற்றோரை முற்றிலும் பிரிந்துள்ள வெள்ளகோவில் வட்டாரத்தில் அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்கும் குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்படும். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
தற்காலிக ஆசிரியை கவிதா, குழந்தைகளின் பாதுகாவலர்களின் உறுதிமொழிச்சான்றை பெற்றார். மொழிபெயர்ப்பு ஆசிரியை கார்த்திகா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திவ்யா, துணைத் தலைவர் மைதிலி உட்பட பலர் பங்கேற்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் பலரின் உதவியுடன், குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. மதிய உணவுக்கான ஏற்பாட்டை திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் செய்தனர்.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் கோ.பிரபாகர் கூறும்போது, “தமிழ்நாடு அரசு காலை உணவு திட்ட வழங்கும் முன்பே, சிலம்பகவுண்டன்வலசு பள்ளிதான் இத்திட்டத்தை கொண்டு வந்தது. தீபாவளியை முன்னிட்டு குழந்தைகளுக்கு புத்தாடை திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். அரசு பள்ளி குழந்தைகளுக்கு சீருடை வழங்குவதுபோல், ஏதாவது ஒரு திருவிழாவுக்கு புத்தாடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கனிவோடு பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
» நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!
» ’கங்குவா’ படத்தொகுப்பாளர் திடீர் மரணம் | திரையுலகினர் அதிர்ச்சி!