கோவை: தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தீபாவளி சமயத்தில் தீக்காயங்கள் ஏற்படாமல் இருக்க திறந்த வெளிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தரமான பட்டாசுகளை முறையாக அனுமதி பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் மற்றும் அதை பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும். இரண்டு வாளி தண்ணீர், மணல் கட்டாயம் பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் இருக்க வேண்டும். கட்டாயம் பெற்றோர் கண்காணிப்பில் மட்டுமே குழந்தைகள் பட்டாசு, மத்தாப்பு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை: வீடுகளுக்குள் பட்டாசு வெடிக்க கூடாது. கைகளில் பிடித்துக்கொண்டு பட்டாசை பற்ற வைக்க கூடாது. பற்ற வைக்கப்பட்ட பட்டாசை குனிந்து நோக்கக்கூடாது. தவறாக பற்ற வைக்கப்பட்ட அல்லது பாதி எரிந்த பட்டாசை தொடக்கூடாது. சிறு குழந்தைகளை தனியாக பட்டாசுகளை கையாள அனுமதிக்க கூடாது. அடுத்தவர்களை குறிவைத்து பட்டாசை பற்ற வைக்க கூடாது. குறுகலான சந்துகளில் பட்டாசை வெடிக்கக் கூடாது.
தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை: தீயை முதலில் அணைக்க வேண்டும். மீறினாலோ போர்வையை சுற்றி அணைக்க வேண்டும். கைகளிலோ அல்லது கால்களிலோ, தீக்காயம் ஏற்பட்டால் முதலில் அணிகலன்களை கழற்றி விட வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் 15 நிமிடம் நீரில் கழுவ வேண்டும். தீக்காயம் மேல் ஐஸ் கட்டி வைக்கக்கூடாது. தீக்காயம் மேல் வீட்டில் உபயோகிக்கும் கூடிய பொருட்களான மஞ்சள், காப்பி பவுடர், பேஸ்ட் போன்றவற்றை தீக்காயம் மேல் பயன்படுத்தக் கூடாது. ஐந்து வயதிற்கு கீழ் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும், கர்ப்பிணிகளும், இதய நோய் உள்ளவர்களும், முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 11 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் 20 பொது படுக்கைகள் தீக்காயத்திற்கு என்றே திறக்கப்பட்டுள்ளது. இங்கு தீக்காயத்திற்கு என்றே அறுவை சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. 24 மணி நேரமும் பிளாஸ்டிக் துறை மருத்துவர்களாலும் பொது அறுவை சிகிச்சை மருத்துவர்களாலும் முதல்வர் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது. தீபாவளி சமயத்தில் ஏற்படும் தீக்காயங்கள் என்றே தனி பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.