பட்டாசு விபத்துகளில் குழந்தைகளே அதிகம் பாதிப்பு: கண் மருத்துவ நிபுணர்களின் ‘அலர்ட்’ குறிப்புகள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: "தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகளில் 60 சதவீதம் பேர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளே" என பெற்றோரை கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தீபாவளி பண்டிகை 31ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளியை, புத்தாடை அணிந்து, தித்திக்கும் இனிப்பு, பட்டாசுடன் கொண்டாட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் தயாராகி வருகிறார்கள். தீபாவளியின் போது குழந்தைகளுக்கு, பட்டாசு வெடிப்பது முக்கிய கொண்டாட்டமாக இருக்கும்.

ஆனால், குழந்தைகள், பெற்றோர் மேற்பார்வையில் பாதுகாப்பு இல்லாமல் பட்டாசு வெடிக்காமல் தனியாக வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டு காயமடைகின்றனர். அதனால், வரக்கூடிய தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து, குறிப்பாக குழந்தைகள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என கண் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதுகுறித்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: "கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனைகளில் கண் காயங்களுடன் வந்த நோயாளிகளின் புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில், 456 நோயாளிகள் கண் தொடர்பான காயங்களுக்கு சிகிச்சைபெற பதிவு செய்துள்ளனர். அவர்களில் 284 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 45 பேர் பார்வை இழப்பை சந்தித்துள்ளனர். இந்த எண்ணிக்கை தீபாவளி பண்டிகை காலமான தற்போது கண் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்துகின்றன. தீபாவளியின் போது உங்கள் கண்களையும் மற்றவர்களின் கண்களையும் பாதுகாக்க சில பாதுகாப்பு யோசனைகளை தெரிவிக்கிறோம்.

குழந்தைகளைக் கண்காணிக்கவும்: "பட்டாசுகளைக் கையாளும் போது குழந்தைகள் எப்போதும் பெரியவர்களால் கண்காணிக்கப் படுவதை உறுதி செய்யவும். அரவிந்த் கண் மருத்துவமனைகளில் தீபாவளி அன்று பதிவாகும் 60 சதவீதம் நோயாளிகள் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பதால், குழந்தைகள் குறிப்பாக காயங்களுக்கு ஆளாகிறார்கள். பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணியுங்கள்.

தீப்பொறிகள் அல்லது வெடிப்புகளில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க பட்டாசுகளை கொளுத்தும்போது பாதுகாப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்தவும். பட்டாசு வெடிக்கும்போதும், கொளுத்தும்போது பட்டாசுக்கும், நமக்கும் உள்ள பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்க வேண்டும். பழுதடைந்த பட்டாசுகளை மீண்டும் கொளுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசு சரியாகப் பற்றவில்லை என்றால், அதை மீண்டும் கொளுத்த முயற்சிக்காதீர்கள். காத்திருந்து பின்னர் அதை பாதுகாப்பாக அணைக்கவும்.

கண்ணில் காயம் ஏற்பட்டால், கண்களைத் தேய்ப்பதையோ அல்லது கழுவுவதையோ தவிர்த்து, உடனடியாக கண் மருத்துவ மனையை அணுகி மருத்துவ உதவியை நாட வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளை மனதில் வைத்துக்கொண்டு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாட வேண்டும்" என்று நிபுணர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE