தேனி: தீபாவளிக்காக தேனியில் பக்கெட் பிரியாணியுடன் ரோஸ் மில்க், பிரட் அல்வா, குளிர்பானம் உள்ளிட்டவற்றை கூடுதலாக அளிப்பதாக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டி காரணமாக பல ஹோட்டல்களிலும் விலையும் குறைக்கப்பட்டுள்ளதால் பிரியாணி முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முன்பெல்லாம் தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகை மற்றும் திருவிழாக்களில் வீடுகளிலேயே விருந்து சமைப்பது வழக்கம். ஆனால், காலமாற்றத்தால் தற்போது உணவகங்களில் இவற்றை ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் அதிரித்துள்ளது. இதற்காக ஹோட்டல்களில் பல்வேறு வகை சிறப்பு உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக தேனியில் பல்வேறு ஹோட்டல்கள் பிரியாணிக்காக பல்வேறு சலுகைகளையும், விலை தள்ளுபடியையும் அறிவித்துள்ளன. இதன்படி 8 பேருக்கான சிக்கன் பிரியாணி ரூ.1,800-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 3 பிளேட் சிக்கன் 65, 8 முட்டை, குழம்புடன் ஸ்வீட்டும் வழங்கப்படுகிறது. 4 பேருக்கு ரூ.1,000-ம், 10 பேருக்கான மட்டன் பிரியாணி ரூ.3 ஆயிரம், 5 பேருக்கு ரூ.1,500 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே அளவில் பல்வேறு உணவகங்களில் ரூ.250 வரை விலை குறைப்பும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரட் அல்வா, குளிர்பானம், தந்தூரி, ரசம், ரோஸ் மில்க், நண்டு லாலிபாப் உள்ளிட்டவற்றை கூடுதலாக அளிப்பதாகவும் சில ஹோட்டல்கள் தாராளம் காட்டி பிரியாணி பிரியர்களை இழுக்கின்றன.
» புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ விவகாரத்தில் சபாநாயகருக்கு கண்டனம்: பொதுநல அமைப்புகள் தர்ணா
» சேலத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பு அலுவலர் கைது
சில கடைகளில் 3 நபர்களுக்கான மினி பக்கெட் பிரியாணி ரூ.800-க்கும் வழங்கப்பட உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் தங்கள் தேவையைப் பொறுத்து போட்டி போட்டுக் கொண்டு தீபாவளி பிரியாணிக்காக முன்பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து உணவகம் ஒன்றின் மேலாளர் ஜீவா கூறுகையில், “தீபாவளிக்கு பிரியாணி விற்பனை அதிகம் இருப்பதால் பல்வேறு சலுகைகளையும், விலை தள்ளுபடியையும் அறிவித்துள்ளோம். வழக்கத்தை விட விலை குறைவு, கூடுதல் சைடிஷ்களையும் அளித்து வருகிறோம். இதனால் தீபாவளிக்கான முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது” என்றார்.