கும்பகோணம்: தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் தமிழகத்தைக் கண்டு மகிழ்வோம்-2024 என்ற தலைப்பின் கீழ் சமூக ஊடகவியலாளர்களின் சுற்றுலாப் பயணம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை வெளிநாடு மற்றும் பிற மாநில சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளவும். தமிழக சுற்றுலா தலங்களைப் பார்வையிட ஊக்குவிக்கவும். வெளிமாநிலங்களில் அதிக அளவில் பார்வையாளர்களைக் கொண்ட உலக அளவில் உள்ள சமூக வலைத்தள ஊடகவியலாளர்களை தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பேருந்து மூலம் சுற்றுலா அழைத்துச் செல்ல சுற்றுலாத் துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் தெரிந்துகொள்ள ஏதுவாக, பிரான்ஸ், இலங்கை நாட்டினைச் சேர்ந்த தலா ஒருவரும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10 பேர் என மொத்தம் 12 பேர் பங்கேற்றனர். இந்த சுற்றுலாப் பயணம் கடந்த 25-ம் தேதி சென்னையில் தொடங்கியது. 3-வது நாளான இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஏ.சங்கர் வழிகாட்டுதலின் படி, தஞ்சாவூர் பெரியகோயிலை பார்வையிட்டப்பின் புறப்பட்ட இந்த சுற்றுலாப் பயணம் அரண்மனை, தர்பார் ஹால், அருங்காட்சியகம், சரஸ்வதி மகால், வீணை வடிவமைப்பது மற்றும் தெக்கூரில் மண்பானை செய்வது உள்ளிட்டவைகளைப் பார்வையிட்டு அதைப்பற்றி விஷயங்களைக் குறிப்பெடுத்துக்கொண்டு, வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
» வெள்ளியங்கிரி மலை ஏற ரூ.5,099 கட்டணம்: அறிவிப்பை ரத்து செய்ய பாஜக வலியுறுத்தல்
» கரூர் ஜவஹர் பஜாரில் தற்காலிக தரைக் கடைக்கு அனுமதி கேட்டு வியாபாரிகள் மறியல்
கும்பகோணம் கோட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளைப் பார்வையிட உள்ளனர். இதைத் தொடர்ந்து காரைக்குடி செட்டிநாடு, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கீழடி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட உள்ளனர். இதையடுத்து. இந்தச் சுற்றுலாப் பயணம் அடுத்த மாதம் 3-ம் மதுரையில் நிறைவடைகிறது.
இவர்கள், தமிழகத்தில் உள்ள கோயில்கள், சுற்றுலாத்தலங்கள், வரலாறு சார்ந்த இடங்களை, சமூக ஊடகவியலாளர்கள் தங்களது வலைத்தள பக்கங்களில் பதிவிடும் போது, பார்வையாளர்கள், இங்கு வரும் சுற்றுலாவாசிகள் எண்ணிக்கை அதிகமாவதுடன், உலகம் முழுவதும் மேலும் பிரபலமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.