திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 31-வது பட்டமளிப்பு விழாவில் பார்வை மாற்றுத்திறனாளியான அரசு அதிகாரி ஜெ. ஃபெரோஸ்கான் (34) தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் முனைவர் பட்டம் பெற்றது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்த ஃபெரோஸ்கான், தடைகளைத் தாண்டி படித்து முன்னேறி, அரசுத்துறை அதிகாரியாகி, தற்போது முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு விடாமுயற்சியுடன் முன்னேறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மந்தாரம் புதூரைச் சேர்ந்த ஜமாலுதீன் மகன் ஃபெரோஸ்கான். இவரது 8-வது வயதில் கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் அவருடைய இடது கண் முற்றிலும் பார்வையை இழந்தது. வலது கண்ணில் பார்வை மங்கியது. இந்த கண்பார்வை குறைபாடு காரணமாக 8-ம் வகுப்புக்கு மேல் ஃபெரோஸ்கானுக்கு படிப்பை தொடர முடியாத சூழ்நிலை உருவானது.
ஆனால் படிப்பின்மீது அவருக்குள்ள ஆர்வத்தை யாரும் தடுக்க முடியவில்லை. தனியார் கல்வி மையத்தில் சேர்ந்து 12-ம் வகுப்பு வரையில் படித்து தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மூலம் பி.காம்., எம்.காம் பட்டங்களை பெற்றார். பின்னர் குமரி மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியொன்றில் 2 ஆண்டுகள் நேரடியாக பி.எட். பட்டப்படிப்பில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்றார்.
» டெல்லியில் அதிர்ச்சி: ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் 17 வயது மாணவி தற்கொலை
» தொப்புள் கொடி கத்தரித்த விவகாரம்: உதவியாளர் மூலம் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
இந்நிலையில் 2017-ம் ஆண்டில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 ஏ தேர்வு எழுதி வெற்றிபெற்று ஊரக வளர்ச்சி துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார் ஃபெரோஸ்கான்.
அரசு வேலையில் சேர்ந்த பின்னரும் தனது கல்வியை தொடர நினைத்து 2017-ல் முனைவர் பட்ட ஆய்வுக்கு பதிவு செய்து நுழைவு தேர்வும் எழுதியிருந்தார் ஃபெரேஸ்கான். ஆனால், அவருக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கான வழிகாட்டியாக பேராசிரியர் யாரும் கிடைக்கவில்லை. ஆனாலும் சோர்வடையாமல் முயன்றதை அடுத்து, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் பெஞ்சமின் வழிகாட்டுதலில் 2018ம் ஆண்டு முதல் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணிகள் வாகனங்களும் வர்த்தகமும் என்ற தலைப்பில் ஆய்வு செய்த ஃபெரோஸ்கான், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 31-வது பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இது குறித்து ஃபெரோஸ்கான் கூறும்போது, “முன்னேற்றத்திற்கு எதுவும் தடை இல்லை. கடுமையாக உழைத்தால் எந்த நிலையையும் அடைய முடியும். நான் தற்போது அரசுப் பணியில் இருந்தாலும் பேராசிரியராக பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கு அரசு உதவ வேண்டும்” என்றார்.