உதகை: மனதை ஒருநிலைப்படுத்த புத்தக வாசிப்பு அவசியம் என்று மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 3ம் ஆண்டு புத்தக திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கி நடந்து வருகிறது. இதில் எழுத்தாளர்கள், பிரபல இலக்கியவாதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இன்று நடந்த நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் கொள்ளு பேரனான நிரஞ்சன் பாரதி கலந்துகொண்டு பேசியதாவது: "புத்தகத் திருவிழாவில் அதுவும் மாணவர்கள் முன்னிலையில் பேசுவது மிகப்பெரிய பாக்கியம் ஆகும். இந்த வாய்ப்பு கொடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி. இதற்கு முன்னர் சுற்றுலாவுக்காக உதகை வந்துள்ளேன், ஆனால் இந்த முறை அறிவு திருவிழாவில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.
பொறுமை மாணவர்கள் வாழ்க்கையில் அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்றால் பாட புத்தகங்களை படிக்க வேண்டும். ஆனால், நீங்கள் வேற லெவலுகக்கு போக வேண்டும் என்றால் மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும். மதிப்பெண்களுக்காக பாடப் புத்தகங்கள் படிக்க வேண்டும். சமுதாயத்தில் மதிப்புடன் இருப்பதற்கு மற்ற புத்தகங்கள் படிக்க வேண்டும். திறமை இருக்கும் அளவுக்கு தற்போது மாணவர்களிடம் பொறுமை இல்லை. வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது.
» ‘நெகிழி விழிப்புணர்வு’ திருமண அழைப்பிதழ் - வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டு!
» ஸ்ரீவில்லி. கூட்டுறவு நூற்பாலையை இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
புத்தகங்களால் செய்ய கூடிய மேஜிக்கை கூகுளால் செய்ய முடியாது. நிகழ்காலத்தில் சமூக வலைதளங்கள் மாணவர்களின் உலகமாக மாறிவிட்டது. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுவதை விட சமூகத்தில் நாம் நல்ல ஸ்டேட்டஸில் இருக்கிறோமா என்பது தான் முக்கியம். புத்தக வாசிப்பு என்பது ஒரு தவம். சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறதை விட சமுதாயத்தில் நீங்கள் எப்போதும் ஒரு டிரெண்டிங்கான பெர்ஷ்னாலிட்டியுடன் இருக்க வேண்டும்.
புத்தக வாசிப்பு உங்களை வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும். வீடுகளில் குழந்தைகளுக்கு முன்னால் பெரியவர்கள் புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டும். புத்தகம் வாசித்தால் பொறுமை அதிகரிக்கும். மனதை ஒருநிலைப்படுத்தும். புத்தக வாசிப்பால் பொருளாதார ரீதியாக நன்மை இல்லை என்றாலும், ஆன்மீக ரீதியாக உளவியல் ரீதியாக பல நன்மைகள் உள்ளது. புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வது முக்கியமல்ல புத்தகங்களுடன் மாணவர்கள் கலந்து கொள்வது முக்கியமாகும்" என்று நிரஞ்சன் பாரதி கூறினார்.