‘பணியிடங்களில் 4 ஊழியர்களில் ஒருவருக்கு மன அழுத்தம்’ - மனநல நிபுணர் அதிர்ச்சி தகவல்

By KU BUREAU

மதுரை: "பணியிடங்களில் 4 ஊழியர்களில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்" என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த உலக மனநல நாள் கருத்தரங்கில் பேசிய மனநல மருத்துவ நிபுணர் சி.ராமசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

உலக மனநல தினத்தை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலத் துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது. பேராசிரியர் டாக்டர் வி.கீதாஞ்சலி வரவேற்றார். டீன் பேராசிரியர் டாக்டர் எல் அருள் சுந்தரேஷ் குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், "இந்த ஆண்டு உலக மனநல தினம். பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது என்ற கருப்பொருளை தாங்கி நடக்கிறது. நான் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணராக மாறுவதற்கு முன்பு, மனநல மருத்துவப் பயிற்சியில் சிறிது காலம் இருந்தேன். இந்த பயிற்சி அனுபவம், பின்னாளில் நோயாளிகளின் மனநலனை அறித்து சிகிச்சை அளிக்க உதவியாக இருந்தது. நோயாளிகளின் பார்வையில் அவர்களைப் புரிந்து கொள்ள உதவியது" என்றார்.

மனநல மருத்துவ நிபுணரும், செல்லமுத்து அறக்கட்டளை பேராசிரியர் சி.ராமசுப்ரமணியன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், "பணியிடங்களில் 4 ஊழியர்களில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தேசிய அளவிலான சர்வேயில், 60 சதவீதம் ஊழியர்கள், மன அழுத்தத்தில் உள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளது. அதில், பெண்களில் 72.2 சதவீதம் பேரும், ஆண்களில் 53.6 பேரும் மன அழுத்தத்தில் உள்ளதாக கூறுகிறது.

இந்த மன அழுத்தத்தை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஆலோசனை, உதவி, வழிகாட்டுதலை வழங்காவிட்டால் அவர்கள் பணி திறன் பாதிக்கப்படுவதால் தேசிய வருவாய் குறைகிறது. ஒரு தனி நபருக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் உடல் நலன் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய், மாரடைப்பு, மூட்டு வலி, வயிறு பிரச்சனைகள், செக்ஸ் பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல்நலன் பாதிக்கப்படும்போது மனநலனும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. மனநலன் பாதிக்கப்படுவதால் குடும்ப நலன் பாதிக்கப்படுகிறது.

குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், சமூக நலனும் பாதிக்கப்படுகிறது. ஒரு தனிப்பட்ட ஒரு மனிதனின் மனநலன் பாதிக்கப்படும் போது இந்த சமூகமும் பெரியளவில் பாதிக்கப்படுகிறது. சமுதாயத்தில் போலீஸார், மருத்துவர்கள் மிகப் பெரியளவில் பணி சூழலால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது. மருத்துவ துறையில் பெரும்பாலும் அவசர சிகிச்சை, மகப்பேறு, புற்று நோய், குழந்தைகள் நலன், குடும்பநலத் துறை, மனநலத் துறை போன்ற பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மிகப்பெரியளவில், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

இவர்கள், 24 மணி நேரத்தில் பணிபுரியும் நேரம் மிக அதிகமாகவும், குடும்பத்துடன் செலவிடம் நேரம், தூங்கும் நேரம் மிக குறைவாக உள்ளது. இவர்களுக்காகவே இந்த முறை, உலக மனநல நாள் இந்த ஆண்டு "பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது" என்ற கருத்துருவை முன்நிறுத்தி கொண்டாப்படுகிறது" என்று ராமசுப்ரமணியன் கூறினார்.

பேராசிரியர் எஸ் மல்லிகா, மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் குமரவேல், ஆர்எம்ஓ டாக்டர் சரவணன், ஆர்எம்ஓ டாக்டர் முரளிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE