புதுக்கோட்டை: உலக மனநல தினம் இன்று (அக்.10) கடைபிடிக்கப்படுகிறது. மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், மனநலத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதன் நோக்கமாகும். நிகழாண்டுக்கான கருப்பொருளாக ‘பணியிடத்தில் மனநலத்தை மேம்படுத்துதல்’ ஆகும்.
சோகம், விரக்தி, ஏமாற்றம், தோல்வி உள்ளிட்ட காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இன்றைய சூழலில் பணிச் சூழல் சார்ந்த மனநல பிரச்சினைகள் ஏற்படுவதும், அதனால் ஏற்படக்கூடிய இயலாமையும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
மனநலம் குறித்து புதுக்கோட்டை அரசு மனநல மருத்துவர் இரா.கார்த்திக் தெய்வநாயகம் கூறியது: மனநல ஆரோக்கியம் என்பது ஒரு மனிதன் தனது முழு திறன்களையும் வெளிப்படுத்துவதுடன், அன்றாட வாழ்வில் தன்னையும், சவால்களையும் நேர்மறையாக எதிர்கொண்டு ஆக்கப்பூர்வமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுடன், சமூகத்துக்கும் பயன்படும் வகையில் வாழ்வதாகும்.
சிலருக்கு உடலியல், உளவியல் மற்றும் சமூகவியல் காரணிகளின் கூட்டு தாக்கத்தால், மன உளைச்சல் உள்ளிட்ட மனநல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
மனப்பதற்றம், படபடப்பு, கவனக் குறைவு, பசியின்மை, தூக்கமின்மை, தீராத தலைவலி, உடல் வலி, வாழ்க்கை பற்றிய எதிர்மறை எண்ணங்கள், மனக்கவலை, அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் போன்றவை மனநலப் பிரச்சினையின் அறிகுறிகளாகும். மனக்கவலை, மனப்பதற்றம் உள்ளிட்ட மனநல பிரச்சினைகளால் 3-ல் இருந்து 5 சதவீதம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், 0.3 சதவீதம் பேர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோருக்கு தமிழக அரசு மருத்துவத் துறையின் சிறப்பு திட்டமான மாவட்ட மனநல திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகள், மருத்துவ சேவைகள், தொலைபேசி வழி ஆலோசனைகள், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நல வாழ்வுக்கான சேவைகள், கர்ப்பிணி பெண்களுக்கான மன உறுதி காக்கும் சேவைகள் வழங்கப்படுகின்றன.
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் மனநல புறநோயாளிகள் பிரிவின் மூலம் சேவை வழங்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து நாட்களிலும் மனநல புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் உள்நோய் நோயாளிகள் பிரிவுகள் மூலம் எந்நேரமும் மனநல சேவைகள் வழங்கப்படுகின்றன.
மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தின் மூலமாக குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றுள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, சிகிச்சையின் மூலம் குணமடைந்த பிறகு குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டும் வருகின்றனர்.
நட்புடன் உங்களோடு எனும் சேவை மூலம் (14416) 24 மணிநேரமும் கட்டணமில்லா தொலைபேசி வழி மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொருவரும் தங்களுடைய பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்குமான சமநிலையை பேணும்போது மனநலம் பாதிக்காது. பணிக்கான நேரத்தை ஒதுக்கி ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கைக்கான முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் மன உளைச்சல் ஏற்படால் வாழ இயலும் என்றார்.