புதுச்சேரி மரச்சிற்பி தட்சிணாமூர்த்தியின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் காலமான கலைமாமணி விருது பெற்ற மரச்சிற்பியும், ஓவியருமான தட்சிணாமூர்த்தியின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரியாங்குப்பம் சோழபுரம் திருப்பூர் குமரன் விதியைச் சேர்ந்தவர் கலைமாமணி விருது பெற்ற தட்சிணாமூர்த்தி (69). மரச்சிற்பியும் ஓவியருமான இவர், தனது இறப்புக்கு பின்னர் தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கும் வகையில், புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2016-ல் உடல் தானம் வழங்க பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தட்சிணாமூர்த்தி கடந்த 3-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரின் விருப்பப்படி, குடும்பத்தினர் ஒப்புதலுடன் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை கண் வங்கி மருத்துவர் பிரணிதா, கண்தான ஆலோசகர் சுந்தரவள்ளி, ஆகியோர் தட்சிணாமூர்த்தியின் கண்களை தானமாக எடுத்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். அதேபோல், மருத்துவம் படிக்கும் மாணவர்களின் மருத்துவ ஆராய்ச்சிக்காக கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தட்சிணாமூர்த்தியின் உடலும் தானமாக வழங்கப்பட்டது. முன்னதாக தட்சிணாமூர்த்தியின் உடலுக்கு அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் டாக்டர் லட்சுமிபதி தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE