பருத்தி சேலை வடிவமைப்பில் பரமக்குடிக்கு பெருமை சேர்த்த பெண் நெசவாளர்கள்!

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: மாநில அளவில் கைத்தறி பருத்தி சேலையில் தூங்கணாங்குருவி மற்றும் பழைய பாம்பன் ரயில் பாலத்தை வடிவமைத்து முதல் மற்றும் 2-ம் பரிசு பெற்ற இரு பெண் நெசவாளர்கள் பரமக்குடி நெசவாளர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 85 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 11,257 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆரம்ப காலத்தில் சாதா தறிகள் மூலம் பருத்தி ரக சேலைகளை உற்பத்தி செய்த இவா்கள் கைத்தறி தொழில்நுட்ப வளா்ச்சியால் ஜக்கார்டு பெட்டி மற்றும் கணினியில் வடிமைக்கப்படும், டிசைன் அட்டைகளைக் கொண்டு நுட்பமான வடிவமைப்புகளை சேலைகளில் உருவாக்கி வருகின்றனர். இங்கு உருவாக்கப்படும் கைத்தறி சேலைகளுக்கு நுகா்வோர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

தற்போது 1,000 புட்டா ரக பருத்தி சேலைகள், பண்டைய கால நாட்டிய மகளிர் உடுத்திய பெரிய பார்டர் ரக சேலைகள், ஆர்கானிக் சேலைகள் ஆகியவை புத்துயிர் ஊட்டப்பட்டு நெய்யப்படுவது இவா்களின் திறமைகளை பறை சாற்றுவதாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும், பம்பர் காட்டன், செயற்கை பட்டு காட்டன் சேலைகளுக்கு மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.

இரண்டாம் பரிசு பெற்ற பாம்பன் பால காட்சியுடன் கூடிய கைத்தறி சேலை

இங்கு ரூ.800 முதல் ரூ.5 ஆயிரம் வரை விலையிலான சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பருத்தி சேலைகள், செயற்கைப் பட்டு காட்டன் சேலைகள், அதிகளவில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மாநில அரசு ரூ.5 லட்சம் பரிசு: இங்குள்ள நெசவாளர்கள் கடந்தாண்டுகளில் பாரதியார், பிரதமர் மோடி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவம் பொறித்த கைத்தறி நூல் சேலைகளை நெய்து பாராட்டைப் பெற்றனர்.ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினத்தன்று, நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைத்தறி நெசவுத் தொழிலை முன்னேற்றும் வகையிலும் தமிழக அரசால் சிறந்த நெசவாளர்களுக்கு பரிசு வழங்கப்படுகின்றன.

பரமக்குடி மகாகவி பாரதியார் நெசவாளர் சங்கத்தின் தலைவர் சரவணன் கைத்தறி சேலையில் கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள யானை, காளை சிற்பத்தை உருவம் பொறித்து நெய்து உருவாக்கினார். இதற்கு 2022-23-ம் ஆண்டுக்கான முதல் பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது.

முதல் பரிசு பெற்ற நெசவாளர் பிரேமா

இந்நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கு பருத்தி பிரிவில் மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருதை பெற்ற பரமக்குடியைச் சேர்ந்த அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பிரேமா, தூக்கணாங்குருவி காட்சியியை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக முதல் பரிசாக ரூ.5 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றார்.

மேலும் லோகமான்ய திலகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் அலமேலு, ராமேசுவரம் பாம்பன் பாலம் மற்றும் கடல் நீர் காட்சியை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக 2-ம் பரிசாக ரூ.3 லட்சம் தமிழக முதல்வரிடம் பெற்றார்.

இதுகுறித்து மாநிலத்தில் முதல் பரிசு பெற்ற நெசவாளர் பிரேமா கூறும்போது, தூக்கணாங்குருவிக்கு நெசவுக்குருவி என்ற பெயரும் உள்ளது. அதனால் அந்த டிசைனை கைத்தறி சேலையில் நெய்தேன். சேலையின் இருபக்கமும் மொத்தம் 187 குருவிகள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் பரிசு பெற்ற நெசவாளர் அலமேலு

அதில் ஒரு தாய்க்குருவி குஞ்சுக்கு உணவு ஊட்டுவது போல் வடிவம் உள்ளது. மொத்தம் 19,312 ஜக்கார்டு பெட்டிகள் கொண்டது இந்த நெசவு. இந்த டிசைன் தமிழக முதல்வருக்கு பிடித்து, மாநில அளவில் முதல் பரிசு வழங்கியுள்ளது எங்களுக்கு பெருமையாக உள்ளது, என்றார்.

மாநிலத்தில் 2-ம் பரிசு பெற்ற அலமேலு கூறும்போது, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டு பெருமையுடையது. தற்போது அந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

இருந்தபோதும் பழைய பாலத்தை நினைவுச்சின்னமாக போற்றும் வகையில் கைத்தறி பருத்தி சேலையில் கடல் நீரோட்டத்துடன் பாம்பன் பாலத்தை வடிவமைத்துள்ளோம். இதற்கு மாநிலத்தில் 2-ம் பரிசு வழங்கிய முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE