தேனியில் பூ விவசாயம் மும்முரம்: நவராத்திரி விழாவின் போது விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

By என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: நவராத்திரிக்காக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பூ விவசாயம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர் வழிபாடு என்பதால் பூக்களின் தேவை அதிகரித்து உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி, கோட்டூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, புள்ளிமான் கோம்பை, தெப்பம்பட்டி, கன்னியப்பிள்ளைபட்டி, டி.ராஜகோபாலன்பட்டி, கொத்தபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பூ விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பூக்கள் ஆண்டிபட்டி, தேனி, சீலையம்பட்டி சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. குறுகிய காலத்தில் பலன் தருவதால் பலரும் பூ விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோழிக்கொண்டை, செண்டு பூ, மல்லிகை, துளசி, சம்பங்கி, பட்டன்ரோஸ், பன்னீர் ரோஸ், ரோஜா உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் விளைவிக்கப் படுகின்றன. குறிப்பாக சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகை, முகூர்த்த தினங்கள், ஓணம், நவராத்திரி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு கூடுதல் பரப்பளவில் இங்கு பூ விவசாயம் நடைபெறும். கடந்த மாதம் ஓணம் பண்டிகையை எதிர்பார்த்து பலரும் பூ விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும் வயநாடு நிலச்சரிவினால் கேரளாவில் இப்பண்டிகை பெரியளவில் கொண்டாடப்படவில்லை. இதனால் பூ விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்நிலையில் வரும் அக்.3ம் தேதி முதல் நவராத்திரி வழிபாடுகள் தொடங்க உள்ளது. 9 நாட்கள் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து பூஜைகள் நடத்துவர்.

வியாபாரி ராஜா

விழாவின் உச்ச நிகழ்வாக சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற நாட்களிலும் வழிபாடுகள் அதிகளவில் நடைபெறும். இதனால் பூக்களின் தேவை அதிகம் இருக்கும். இதை கணக்கிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பூ விவசாயம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மகசூல் பருவத்தில் உள்ளதால் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், செடி நட்டு 50 நாளில் செண்டு உள்ளிட்ட பூக்கள் மகசூலுக்கு வரும். இரண்டு மாதம் வரை தினமும் பூக்களை பறிக்கலாம். நவராத்திரி உள்ளிட்ட விசேஷ தினங்களை கணக்கிட்டு நடவு செய்துள்ளோம். தற்போது பூக்கள் மகசூல் பருவத்தில் உள்ளன. உரிய விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.

சீலையம்பட்டி பூ மார்க்கெட் வியாபாரி ராஜா கூறுகையில், "இந்த ஆண்டு ஓணம் வர்த்தகம் களையிழந்து விட்டது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இந்நிலையில் நவராத்திரிக்கான பூ விற்பனையை எதிர்பார்த்து உள்ளோம். தமிழகம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் பூக்களின் தேவையும் அதிகம் இருக்கும்" என்று ராஜா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE