மலர்க்காட்சி அல்லாத ஏற்காடு பூங்காக்களில் நுழைவுக் கட்டண உயர்வு: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

By எஸ்.விஜயகுமார்

சேலம்: ஏற்காடு கோடை விழாவில், அண்ணா பூங்காவில் மட்டும் மலர்க்காட்சி உள்பட சிறப்பு ஏற்பாடு செய்துவிட்டு, போதுமான ஏற்பாடுகள் இல்லாத அரசின் மற்ற பூங்காக்களுக்கும் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஏற்காடு கோடை விழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அங்குள்ள அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்ட மலர்க்காட்சி வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை காரணமாக, ஏற்காட்டுக்கு தொடர்ந்து கணிசமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்ச் சிற்பங்களை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன், அவற்றின் அருகில் நின்று போட்டோ மற்றும் செல்ஃபி ஆகியவற்றை எடுத்து மகிழ்கின்றனர்.

இதேபோல், ஏற்காட்டில் இருக்கும் தோட்டக்கலைத் துறையின் மற்ற பூங்காக்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் சென்று வருகின்றனர். குறிப்பாக, ரோஜாத் தோட்டம், அரசு தாவரவியல் பூங்கா- I, அரசு தாவரவியல் பூங்கா- II, ஏரிப் பூங்கா ஆகியவற்றுக்கும் சுற்றலாப் பயணிகள் ஆர்வமுடன் செல்கின்றனர். ஆனால், அங்கு மலர்க்காட்சி ஏற்பாடுகள் மிகவும் சாதாரணமாக இருந்ததால் பெரிதும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கூறியது: ஏற்காடு கோடை விழா - மலர்க்காட்சியை காண்பதற்கு, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் வந்தனர். தற்போது, மலர்க்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாகவே இருக்கிறது.

ஏற்காடு கோடை விழா- மலர்காட்சியை ஒட்டி, ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள் அனைத்திலும் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே, நுழைவுக் கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ.20-ம், பெரியவர்களுக்கு ரூ.30-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது சிறியவர்களுக்கு ரூ.25 எனவும், பெரியவர்களுக்கு ரூ.50 எனவும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டாலும், அண்ணா பூங்காவில் பல மலர்ச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு, கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

ஆனால், ரோஜாத் தோட்டம், ஏரிப் பூங்கா உள்பட தோட்டக்கலைத் துறையின் பிற பூங்காக்களில், பூந்தொட்டிகளை அடுக்கி வைத்து, பெயளரவுக்கு மட்டுமே மலர்க்காட்சி அமைத்துள்ளனர். ஆனால், அண்ணா பூங்காவுக்கு இணையாக, மற்ற பூங்காக்களுக்கும் ஒரே விதமான கட்டணம் வசூலிக்கப்படுவது, ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், மிகவும் ஆர்வத்துடன் ரோஜாத்தோட்டம், அரசு தாவரவியல் பூங்கா உள்பட பிற பூங்காக்களுக்கு வந்து பார்வையிட்டபோது, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் ஏதுமில்லாமல், பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஏற்காட்டில், பூங்காக்கள் மட்டுமே முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. ஆனால், பல ஆண்டுகளாகியும், பூங்காக்கள் மேம்படுத்தப்படாமல், இருக்கின்ற நிலையிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் பிற பூங்காக்களையும் மேம்படுத்தி, இங்கு வந்து செல்லும் பயணிகளுக்கு, மன நிறைவான சுற்றுலா கிடைத்திட, அரசு உறுதி செய்திட வேண்டும். மேலும், கோடை விழா நாட்கள் தவிர, ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய நிலையில், புதுமையான சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்திட அரசு முன் வர வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE