நடப்பு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், பெண்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற கவலையூட்டும் தகவல் வெளிப்பட்டுள்ளது.
’ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ என்ற தேர்தல் உரிமை அமைப்பு பகிர்ந்துள்ள தரவுகள், இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதத்தினர் ஆண்கள் என்றும், பெண்கள் 10 சதவீதத்துக்கும் சற்றுக்குறைவு என்ற அதிர்ச்சிகர தகவலையும் அளித்துள்ளது.
அதாவது மக்களவைத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் 8,337 வேட்பாளர்களில், 797 பேர் மட்டுமே பெண்கள். இது மொத்த வேட்பாளர்களில் வெறும் 9.5 சதவீதமாகும். வாக்களிப்பவர்களில் சரிபாதியினர் பெண்களாக இருக்கும்போது அவர்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் சரிபாதி எண்ணிக்கையில் மகளிர் வேட்பாளர்களை முன்னிறுத்துவதே நியாயமாக இருக்கும். அல்லாது போனாலும், மகளிர் இடஒதுக்கீடு அடிப்படையிலான எண்ணிக்கையிலாவது பெண்களுக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பளித்திருக்கலாம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள போதும், அது இன்னமும் அமலுக்கு வரவில்லை.
முதல் கட்ட தேர்தலில் களமிறங்கிய 1,618 வேட்பாளர்களில் 135 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். இரண்டாம் கட்ட தேர்தலின் 1,192 வேட்பாளர்களில் 100 பேர் மட்டுமே பெண்கள். 3ம் கட்ட தேர்தலின் 1,352 வேட்பாளர்களில் 123 பேர் பெண்கள். 4-ம் கட்ட தேர்தலில் 1,710 வேட்பாளர்களில் 170 மட்டுமே பெண்கள். 5வது கட்ட தேர்தலில் மொத்தமுள்ள 695 வேட்பாளர்களில் 82 பேர் மட்டுமே பெண்கள். 6வது கட்ட தேர்தலில் 866 வேட்பாளர்களில் 92 பேர் பெண்கள் ஆவர். 7-ம் கட்ட தேர்தலில் 904 வேட்பாளர்களில் 95 பேர் மட்டுமே பெண்கள். இந்த தரவுகள் மேற்குறிப்பிட்ட அமைப்பின் புள்ளிவிவரங்களில் இடம்பெற்றுள்ளன.
தொடரும் இம்மாதிரியான பாலின ஏற்றத்தாழ்வு பொதுவெளியில் கடும் விமர்சனத்தை விளைவிக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கிடப்பில் போடும் கட்சிகள் மட்டுமன்றி, அதற்காக கூப்பாடு போடும் கட்சிகளும், தாமாக முன்வந்து மகளிருக்கு சீட் வழங்காதது ஏன் என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. இவற்றில் இன்னொரு கொடுமையாக, சொற்ப எண்ணிக்கையில் தேர்தலில் நின்று வெற்றி பெறும் மகளிர் மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலானோர், தந்தை, கணவர், சகோதரர் என ஆண்களின் பின்னே ஒதுக்கப்படுவது இன்னொரு வேதனைக்குரிய விவாதத்தை கோரியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!
சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!
காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்
மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!