மகிழ்ச்சியான மனநிலை வேண்டுமா?... மறக்காது இந்த உணவுகளை தவிர்த்திடுங்க!

By எஸ்.எஸ்.லெனின்

மகிழ்வான வாழ்க்கைக்கு அடித்தளமிடும் ஆரோக்கியமான மனநிலையை, குறிப்பிட்ட உணவு ரகங்களை தவிர்ப்பதன் மூலமாகவும் அடையலாம்.

வாழ்வின் ஆகப்பெரும் இலக்காக மகிழ்ச்சியே அமைந்திருக்கிறது. மகிழ்ச்சி என்பதை எந்த விலை கொடுத்தாவது அடைந்துவிட மனிதர்கள் தவிக்கிறார்கள். மகிழ்ச்சியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விலை உயர்ந்த பொருட்களால் வீட்டையும் தங்களையும் நிரப்ப முயற்சிக்கிறார்கள். வெளியிலிருந்து கிடைப்பதல்ல, நம் உள்ளிருந்து பெருக்கெடுப்பதே மகிழ்ச்சி என்பவர்கள் ஆத்ம பரிசோதனையில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவற்றுக்கு அப்பால் நாம் தேடும் மகிழ்வைத் தீர்மானிப்பதில் நமது உணவுக்கும் முக்கியப் பங்குண்டு என்பதை உணர்வதும், மகிழ்ச்சிக்கான தேடலை முழுமை செய்யும்.

மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன உண்ணலாம் என்பதைவிட எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம். முக்கியமாக நாவின் சுவை மொட்டுகளை தூண்டுவதன் மூலம் மகிழ்ச்சியைத் தரும் உணவுகளில் பெரும்பாலானவை, வயிற்றை எட்டியதும் நமது மகிழ்ச்சிக்கு வேட்டு வைப்பவையாக மாறுகின்றன.

உணவு

ஆம். நமது உணவுமுறை நமது மன ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கிறது. நாம் உண்ணும் உணவுகள் மூளையின் செயல்பாட்டைத் தூண்டி ஒட்டுமொத்த மனநிலையை பாதிக்கிறது. மூளையின் செயல்பாடு, ஹார்மோன் அளவுகள் மற்றும் ஊட்டச்சத்து சமநிலை ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் காரணமாக, சில உணவுகள் மன ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த மனநிலையையும் எதிர்மறையாக பாதிக்கக் கூடும். மகிழ்ச்சியை இழந்தவர்கள் கூடுதல் காரணங்கள் சேரும்போது மனச்சோர்வு, பதற்றம் உள்ளிட்ட மனநல பாதிப்புகளையும் தூண்டக்கூடும். எனவே மகிழ்வான மனநிலையை உணர நாம் தவிர்த்தாக வேண்டிய உணவுகளை இங்கே பார்க்கலாம். இவற்றை முழுமையாக தவிர்க்க இயலாது என்பவர்கள், அவற்றின் அளவையேனும் குறைக்க முயலலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: தற்காலத்திய வாழ்க்கைச் சூழலில் பதப்படுத்திய உணவுகள் அன்றாடம் நமது சாப்பாடு மேசையை அதிகம் நிறைத்திருக்கின்றன. உணவுகளை பதப்படுத்துவதற்கான வேதி சேர்மானங்கள், மூளையின் செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கக் கூடியவை. இவற்றுக்கு மாறாக ஃப்ரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் உள்ளிட்ட பதப்படுத்தப்படாத உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.

இனிப்புகள்

இனிப்பு உணவுகள், பானங்கள்: சர்க்கரை அதிகம் சேர்ந்த உணவுகள், பானங்களை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதனால் மனநிலை மாற்றங்கள், அடையாளம் அறிய இயலாத எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும். மூளை ரசாயனங்களின் சமநிலையையும் இது சீர்குலைக்கும். வெளியிடங்களில் தயாராகும் உணவுகளில் சுவையூட்டியாக அதிகம் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகளும் பாதிப்பை உண்டு பண்ணும். மாறாக தேன் போன்ற இயற்கை இனிப்புகளை மிதமாக எடுக்கலாம்; அல்லது சுவையான பழங்களை ருசிக்கலாம்.

டிரான்ஸ் கொழுப்புகள்: வறுத்த உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகள் மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் உற்பத்தியில் தலையிடலாம். மாறாக, ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் போன்ற ஆரோக்கிய கொழுப்புகளை நாடலாம்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்: வெளியே நாம் விரும்பி உண்ணும் வெள்ளை ரொட்டி போன்ற பேக்கரி தயாரிப்புகள் முதல் வீட்டில் தயாராகும் வெள்ளை அரிசி உணவுகள் வரை இரத்த சர்க்கரையை பாதிக்கக்கூடியவை. இவற்றை தவிர்க்க முடியாது போனாலும் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. எனவே பட்டை தீட்டிய வெள்ளை அரிசிக்கு மாறாக பழுப்பு அரிசி மற்றும் முழு கோதுமை ரொட்டி போன்றவற்றுக்கு மாறலாம்.

மது

மது மற்றும் காஃபின்: மேலுக்கு மகிழ்ச்சியை போக்குக்காட்டி, மனமகிழ்வை சுத்தமாக இவை சுரண்டி எடுத்துவிடக்கூடியவை. தூக்கத்தை சீர்குலைத்து, உடலின் நீரேற்றத்தை பாதித்து, நரம்பு இயக்கத்துக்கும் ஊறு விளைவிக்கும். மாறாக மூலிகைத் தேநீர் முதல் பழச்சாறுகள் வரை அருந்தலாம்.

அதிகப்படி சோடியம் மற்றும் வறுத்த உணவுகள்: அதிகப்படி உப்பு உடலின் நீரிழப்பு முதல் இரத்த அழுத்தம் வரை பாதிப்புகளுக்கு வித்திடும். உப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பதும், அதனை அளவாக சேர்ப்பதும் மனநிலையை மகிழ்வாக வைத்திருக்கும். வறுத்த உணவுகளில் நிறைந்திருக்கும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், மனநலனை நேரடியாக பாதிக்கும். அதிலும் சுட்ட எண்ணெயை பயன்படுத்தும் வெளி உணவுகள், இதர உடல்நல பாதிப்புகளுக்கும் இடமளிக்கும்.

இதையும் வாசிக்கலாமே...


லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE