ஷாக்... அட்சய திருதியை நாளில் தங்கம் விலை அதிரடியாக உயர்வு!

By காமதேனு

அட்சய திருதியை நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்சய திருதியை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்துக்களுக்கு மட்டுமின்றி சமணர்களுக்கும் இந்த நாள் புனித நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் புதிய செயல்களைத் தொடங்குவது, சுப காரியங்களைச் செய்வது, மங்களப் பொருட்களை வாங்குவது ஆகியவற்றை மக்கள் செய்கிறார்கள். அட்சய திருதியை நாளில் தொடங்கப்படும் செயல்கள் வெற்றியை மட்டுமே தரும் என்பதும், அது வளர்ந்து கொண்டே செல்லும் என்பதும் ஐதீகம்.

அதன் காரணமாக அட்சய திருதியை அன்று குண்டுமணி அளவு தங்கமாவது வாங்குவது என்ற எண்ணம் மக்களின் மனதில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 4,17 மணிக்கு தொடங்கி நாளை ( மே 11) மதியம் 2.50 மணி வரை உள்ளது. இந்த இரு நாட்களிலும் நகைகள் வாங்க நல்ல நேரம் காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் தங்க நகைகள் வாங்க முடியாதவர்கள் இந்த நாளின் பிற நேரங்களில் வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. அத்துடன் வாடிக்கையாளர்களைக் கவர ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே நகைக் கடைகளில் தங்க நகைகளுக்கான முன்பதிவு வேகமாக நடந்து வந்தது. மக்களைக் கவரும் விதமாக, சேதாரத்தில் குறிப்பிட்ட சதவீதம் குறைவு, பவுனுக்கு ரூ.1,000 முதல் தள்ளுபடி என பல்வேறு சலுகைகளை நகைக் கடை உரிமையாளர்கள் போட்டி போட்டு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது தங்கம் வாங்க வந்த மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 22 காரட் மதிப்பு கொண்ட தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,660 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.90 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் கொண்ட தங்கம் விலை கிராம் ரூ.7,130 ஆகவும், சவரன் ரூ.57,040 ஆகவும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வந்த தங்கத்தின் விலை அட்சய திருதியை நாளில் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE