குறட்டை விட்டுத் தூங்கிய ஸ்டேஷன் மாஸ்டர்... சிக்னல் கிடைக்காததால் தவித்த ரயில் பயணிகள்!

By காமதேனு

ஸ்டேஷன் மாஸ்டர் தூங்கியதால், சிக்னல் கிடைக்காமல் அரைமணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்ட சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது.

இந்தியாவில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரியது என்ற பெயரை இந்திய ரயில்வே பெற்றுள்ளது. இந்திய ரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். அத்துடன் ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்கிறது. அத்துடன் இந்திய ரயில்வேயில் 12.54 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

ரயில் பயணிகள்

இப்படிப்பட்ட துறையில், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது என்பது புதிதல்ல. சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளாலும், சில சமயங்களில் மோசமான வானிலை காரணமாகவும் ரயில்கள் மணிக்கணக்கில் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக பயணிகள் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் ஆக்ராவில் நடைபெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள உடிமோர் ரயில் நிலையம் இட்டாவிற்கு முன் உள்ள முக்கியமான ரயில் நிலையமாகும். ஆக்ராவைத் தவிர ஜான்சியிலிருந்து பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தின் வழியாகத் தான் இயக்கப்படுகின்றன.

உடிமோர் ரயில் நிலையம்

இந்த ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அப்போது இந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அயர்ந்து உறங்கியுள்ளார். இதன் காரணமாக அந்த ரயில் புறப்படத் தாமதமானது. இதன் காரணமாக ரயிலில் இருந்து பயணிகள், ரயில்வே ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். உறங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரை எழுப்ப, ரயிலின் லோகோ பைலட் பலமுறை ஹாரன் அடித்தார்.

உடிமோர் ரயில் நிலையம்

ஒருவழியாக தூக்கத்தில் இருந்து எழுந்த ஸ்டேஷன் மாஸ்டர், ரயில் ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டார். பணியில் இருந்த பாய்ண்ட்ஸ் மேன் தண்டவாளத்தைச் சரிபார்க்கச் சென்றதால், ரயில் நிலையத்தில் தான் மட்டும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இதன் பின் ரயில் அங்கிருந்து சென்றது. ஸ்டேஷன் மாஸ்டர் தூங்கியதால், உடிமோர் ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE