கொரோனா பீதி... நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்!

By காமதேனு

கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்து சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கணிசமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கேரளாவில் கொரோனா தொற்று தினந்தோறும் 500-க்கும் அதிகமான எண்ணிக்கையில் பதிவாகி வருவதால் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் எல்லையோர மாவட்டங்களில் தீவிர மருத்துவ கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட எல்லையில் 5 இடங்களில் தீவிர மருத்துவ பரிசோதனை

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக உள்ள நீலகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு, தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களும் மீண்டும் நீலகிரி மாவட்டம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வருகை தருகின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதனை

இந்த நிலையில் கர்நாடகாவிலும், கேரளாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்நாடுகாணி, தாளூர், பாட்டவயல். பிதர்காடு, கக்கநள்ளா உள்ளிட்ட ஐந்து சோதனை சாவடிகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் தீவிர கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் வரும் அனைத்து பயணிகளுக்கும் வெப்பமானி கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்பு, அது இல்லை என்பது தெரிய வந்தால் மட்டுமே தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா

கேரளா மாநிலத்தில் தற்போது உருமாறியுள்ள ஜே.என்.1 வகை கொரோனா தொற்றுடன் ஏராளமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 40 முதல் 50 பேருக்கு தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை இந்த மாவட்டத்தில் ஐந்து பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


பிரதமர் விழாவில் சர்ச்சையை கிளப்பிய முதல்வர்... கொந்தளிக்கும் பாஜக!

அடம்பிடிக்கும் காங்கிரஸ்... கறார் காட்டும் திமுக... கூட்டணியில் திடீர் சிக்கல்!

இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் கொலை... 3 மாதம் கழித்து கொலையாளி கைது!

அரசியலிலும் அவர் கேப்டன்... விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம்!

13 வயதில் நடந்த பாலியல் தொல்லை... மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE