ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு உயர்வு; 8 மாதங்களுக்குப் பின் உச்சம்... அச்சத்தில் மக்கள்!

By காமதேனு

இந்தியாவில் 8 மாதங்களுக்குப் பின்னர் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒரே நாளில் கொரோனாவுக்கு நாட்டில் 7 பேர் பலியாகியுள்ளனர். மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சீனாவின் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020 முதல் உலக நாடுகளை ஆட்டிப்படைத்தது. பொதுமுடக்கம், பொருளாதார முடக்கம், உயிர் பலிகள் என உலக நாடுகளையே இரண்டு ஆண்டுகள் ஸ்தம்பிக்க வைத்தது கோவிட் வைரஸ். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் பெரிதாக இல்லாததால் மக்கள் பெருமூச்சு விட்டனர்.

கரோனா பரிசோதனை

மக்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் விதமாக கடந்த சில வாரங்களாகவே உலகின் பல்வேறு நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதேபோல இந்தியாவிலும் ஜே.என்.1 வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா அதிகம் பரவியது. பின்னர் நாடு முழுவதுமே கொரோனா பரவல் சற்று அதிகமாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக, அதாவது 227 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கேரளாவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4309 ஆக உள்ளது. 8 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதன் காரணமாக பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இனிவரும் வாரங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE