எஞ்சின் கோளாறால் பாதியில் நின்ற மலை ரயில்; சுற்றுலா பயணிகள் அவதி

By காமதேனு

என்ஜின் கோளாறு காரணமாக உதகை மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இதன் பின்னர் மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ரயில் குன்னூரை சென்றடைந்தது.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சீசன் காலமாக கருதப்படும் நிலையில், டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை இரண்டாவது சீசன் என அழைக்கப்படுகிறது. முதல் சீசனில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில், இரண்டாவது சீசனுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வருகை தருகின்றனர்.

எஞ்சின் கோளாறால் ரயில் பாதியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதி

தற்போது தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதோடு, கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். நீலகிரிக்கு வருகை தரும் பெரும்பாலானவர்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரிய மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி மலை ரயில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் கிளம்பியது.

மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு 3.15 மணி நேரம் தாமதமாக ரயில் குன்னூர் சென்றடைந்தது

ஆர்டர்லி ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென ரயிலின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகினர். இதையடுத்து ரயில்வே பணியாளர்கள் உடனடியாக ரயில் என்ஜினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை சீர்செய்ய முடியாததால் மாற்று எஞ்சின் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சுமார் மூன்றேகால் மணி நேரம் தாமதமாக ரயில் குன்னூர் ரயில் நிலையத்தை வந்து அடைந்தது. இதையடுத்து மாற்று ரயில் என்ஜின் மூலமாக உதகைக்கு ரயில் இயக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE