பூண்டு விலை கிடுகிடு உயர்வு; அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

By காமதேனு

தமிழ்நாடு முழுவதும் தொடர் மழை காரணமாக பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால் ஒரு கிலோ பூண்டு ரூ.350 வரை விலை அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக மலை மாவட்டமான நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டது என்பதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பூண்டு விளைவிக்கப்பட்டு, தமிழகத்திற்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு வருகிறது.

வரத்து குறைவால் பூண்டு விலை கிடுகிடு உயர்வு

கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மண்ணிற்கு அடியில் விளையும் பூண்டு, மழை காரணமாக பல இடங்களில் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை விலை அதிகரித்தும் கொள்முதல் விலை அதிகரிக்கவில்லை என விவசாயிகள் வேதனை

அன்றாட உணவில் பூண்டுக்கு முக்கிய இடம் உண்டு என்பதால் பூண்டின் விலை உயர்வு இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு கிலோவிற்கு 150 ரூபாய் வரை பூண்டின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பூண்டின் விலை அதிகரிக்காததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.150 முதல் ரூ.180 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று வட மாநிலங்களில் இருந்து வரும் பூண்டு ரகங்களின் விலைகளும் உயர்ந்து காணப்படுவது, ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் பூண்டு விலை உயர்வை எகிறச் செய்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE